ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் - எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கடலூரில், தி.மு.க.வினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
கடலூர்,
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கடலூர் மாவட்ட தி.மு.க. சார்பில், கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ரமேஷ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கணேசன், சபா.ராஜேந்திரன், துரை கி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. நகர செயலாளர் ராஜா வரவேற்றார்.
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பேசுகையில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு செல்வதுடன், விளை நிலங்கள் அனைத்தும் சுடுகாடாக மாறிவிடும். இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.
தமிழகத்தை ஆளுகின்ற அரசு, மத்திய அரசின் கைப்பாவையாக உள்ளது. தி.மு.க. ஆட்சியில் இருந்திருந்தால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தவிட்டிருக்காது.
பல ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளையடிக்கும் நோக்கத்திலேயே இந்த திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முனைப்பு காட்டுகிறது. இந்த திட்டத்திற்கு எதிராக வருகிற 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகளுக்கும் சென்று கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என் றார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன், வி.ஆர் அறக்கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம், மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, பொருளாளர் குணசேகரன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் அகஸ்டின் பிரபாகரன், நகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து மாற்றுக்கட்சியினர் பலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
Related Tags :
Next Story