‘நீட்’ தேர்வை ஒழிக்கும் வரை போராட்டம் ஓயாது - திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி பேச்சு


‘நீட்’ தேர்வை ஒழிக்கும் வரை போராட்டம் ஓயாது - திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி பேச்சு
x
தினத்தந்தி 28 Jan 2020 10:45 PM GMT (Updated: 28 Jan 2020 8:36 PM GMT)

‘நீட்’ தேர்வை ஒழிக்கும் வரை போராட்டம் ஓயாது என்று திண்டிவனத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கி.வீரமணி பேசினார்.

திண்டிவனம்,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நீட் தேர்வை எதிர்த்து கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி நீட் எதிர்ப்பு பரப்புரை பெரும் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த 9-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இப்பயணம் நேற்று முன்தினம் திண்டிவனத்தை வந்தடைந்தது. அங்கு நேரு வீதியில் உள்ள காந்தியார் திடலில் “நீட்“ தேர்வு எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். விழுப்புரம் மண்டல திராவிடர் கழக தலைவர் தாஸ், மண்டல செயலாளர் செல்வராசு, பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைத்தலைவர் பெத்தண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பரந்தாமன் வரவேற்று பேசினார். திராவிடர் கழக பேச்சாளர்கள் பெரியார் செல்வன், அன்பழகன், திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் பேசினார்கள். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

அரசியல் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக அமைப்பை சீரழிக்கலாம் என்று எண்ணிக்கொண்டு ஆட்சி நடத்தக் கூடிய மத்திய அரசின் அவலங்களை எடுத்துச் சொல்ல வாய்ப்பாக பெரும் பரப்புரை பயணத்தை மேற்கொண்டிருக்கிறோம். திண்டிவனம் நகரில் நுழையும் போது பார்த்து கொண்டு வந்தேன் ஏராளமான மருத்துவர்கள் இருப்பதற்கான போர்டுகளை பார்த்தேன். ‘நீட்’ தேர்வு வந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா? ஏனென்றால், அன்றைக்கு மருத்துவராக படிக்க வேண்டும் என்றால் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும். சமஸ்கிருதத்தை நாம் படிக்க கூடாது என்றது மனுதர்மம். அப்படியென்றால் யார் மருத்துவராக முடியும் என்றால் பார்ப்பனர்கள் மட்டும் தான் மருத்துவராக முடியும். இதனை மாற்றிக் காட்டிய தலைவர்கள் தந்தை பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் போன்ற நமது தலைவர்கள். இதையெல்லாம் பொய்யாய், பழங்கதையாய் போக்கிடத்தான் இந்த நீட் தேர்வு.

நீதிக்கட்சி ஆட்சி வந்ததும் பெரியார் நமக்கு சமூக நீதி, இட ஒதுக்கீடு, வகுப்புவாரி உரிமை என்ற தத்துவங்களை சொன்னார். அதை மாற்றிட ஆச்சாரியார் கொண்டு வந்த திட்டம்தான் குலக்கல்வி திட்டம். அப்போது பெரியார் சொன்னார் தோழர்கள் பெட்ரோலும் தீக்குச்சியும் கையில் வைத்து கொள்ளுங்கள். நான் சொல்லும்போது பயன்படுத்துங்கள் என்றார். ஆச்சாரியார் ஆட்சியை விட்டு விலகினார். அடுத்து யாரென்று பார்த்தபோது பச்சைத் தமிழர் காமராஜர் ஆட்சியில் அமர்ந்தார். ராஜாஜி மூடிய பள்ளிகளையெல்லாம் திறந்ததுடன் கூடுதலாகவும் பள்ளிகளை காமராஜர் திறந்தார். இன்றைக்கு புதிய வடிவில் ‘நீட்’ தேர்வு என்று மத்திய அரசு கொண்டு வருகிறதே இதை இந்த மாநில ஆட்சி தடுத்திருக்க வேண்டாமா? மத்திய அரசு திரும்பி பார்த்தாலே தொப்பென்று காலில் விழுகிறார்களே? ஆட்சியாளர்களுக்கு முதுகெலும்பு இல்லையே! உங்கள் பிள்ளைகளுக்காகத்தான் இந்த பெரும் பயணத்தை தொடங்கியிருக்கிறோம். எனவே நீட் தேர்வை ஒழிக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., டாக்டர் மாசிலாமணி எம்.எல்.ஏ., சீத்தாபதி சொக்கலிங்கம் எம்.எல்.ஏ., தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சேதுநாதன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் இன்ப ஒளி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சேரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி.தொகுதி செயலாளர் ராமதாஸ், நகர காங்கிரஸ் கட்சித் தலைவர் விநாயகம், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயலாளர் சையத்ஹசன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் தாஜூதீன், ம.தி.மு.க. நகர செயலாளர் பாஸ்கரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜான்பா‌ஷா, ம.ஜ.க. மாவட்ட செயலாளர் முகம்மது ரிஸ்வான் மற்றும் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தி.க.மண்டல இளைஞர் அணி செயலாளர் தா.இளம்பரிதி நன்றி கூறினார். இந்த பரப்புரை பயணம் நாளை(வியாழக்கிழமை) சென்னையை சென்றடைகிறது. அன்று மாலை சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நீட் எதிர்ப்பு பரப்புரை பெரும் பயண நிறைவு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

Next Story