கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி மும்பை, புனேயில் 6 பேருக்கு மருத்துவ கண்காணிப்பு


கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி மும்பை, புனேயில் 6 பேருக்கு மருத்துவ கண்காணிப்பு
x
தினத்தந்தி 28 Jan 2020 9:33 PM GMT (Updated: 28 Jan 2020 9:33 PM GMT)

கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் மும்பை, புனேயில் 6 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

மும்பை,

சீனாவை உலுக்கி உள்ள கொரோனா என்ற கொடிய வைரஸ் நோய் மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்த நோய் இந்தியாவில் பரவாமல் தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 18-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை சீனாவில் இருந்து மும்பை விமான நிலையம் வந்த 3 ஆயிரத்து 756 பயணிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல கடந்த 1-ந் தேதி முதல் சீனாவின் வுகான் நகரில் இருந்து மும்பை வந்த பயணிகள் பட்டியலையும் மாநில அரசு தயார் செய்து உள்ளது. அந்த பயணிகளுடன் தொடர்பில் உள்ள மாநில சுகாதாரத்துறையினர் அவர்களின் உடல்நலம் குறித்து அவ்வப்போது கேட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருப்பவர்கள் மும்பை கஸ்தூர்பா மற்றும் புனேயில் உள்ள நாயுடு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி சீனாவில் இருந்து திரும்பி கொரோனா வைரஸ் அறிகுறியுடன் நேற்று வரை மும்பையில் 4 பேரும், புனேயில் 2 பேரும் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மாநில சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் பிரதீப் அவாதே தெரிவித்தார்.

அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரியவந்து உள்ளது. ஆனாலும் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் அவர்கள் வைக்கப்பட்டு இருப்பதாக அந்த அதிகாரி கூறினார்.

Next Story