காதலை சேர்த்து வைப்பதாக ஆன்லைனில் வலைவிரித்து பெண்களிடம் பணம் பறித்த வாலிபர் சிக்கினார்


காதலை சேர்த்து வைப்பதாக ஆன்லைனில் வலைவிரித்து பெண்களிடம் பணம் பறித்த வாலிபர் சிக்கினார்
x
தினத்தந்தி 28 Jan 2020 11:00 PM GMT (Updated: 28 Jan 2020 9:44 PM GMT)

காதலை சேர்த்து வைப்பதாக ஆன்லைன் மூலம் வலைவிரித்து பெண்களிடம் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை கோரேகாவ் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் மற்றும் அவரது காதலன் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர்களின் காதல் முறிந்தது. இதனால் தனது காதலை புதுப்பிக்க அவர் முயற்சி செய்து வந்தார். இந்தநிலையில் இவருக்கு ஆன்லைனில் லவ்குரு என்ற பெயரில் வெப்சைட் ஒன்றின் அறிமுகம் கிடைத்தது.

தனது காதலை புதுப்பிக்க தேவையான ஆலோசனைகளை தரும்படி விண்ணப்பம் செய்திருந்தார். சில நாள் கழித்து அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. இதில் பேசிய ஆசாமி லவ்குரு நிலையத்தில் இருந்து பேசுவதாகவும், காதலை புதுப்பிக்க ரூ.10 ஆயிரம் கட்டணம் செலுத்தி சிறப்பு பூஜை நடத்தினால் இதற்கு பலன் கிடைக்கும் என தெரிவித்தார்.

இதனை நம்பிய இளம்பெண் உடனடியாக ரூ.10 ஆயிரத்தை அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கில் செலுத்தினார். ஆனால் காதலருடன் சேர எந்தவொரு முயற்சியும் நடக்கவில்லை. மீண்டும் தன்னுடன் பேசிய ஆசாமியை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டார். இதற்கு ரூ.45 ஆயிரம் செலுத்தினால் மிகப்பெரிய அளவில் பூஜை நடத்தி அவர்களை சேர்த்து வைப்பதாக கூறினார். இதனை நம்பிய இளம்பெண் மீண்டும் பணத்தை அனுப்பி வைத்தார்.

இதேபோல பல்வேறு சந்தர்ப்பங்களில் இளம்பெண் ரூ.2 லட்சத்து 61 ஆயிரம் செலுத்தினார். இதற்கு எந்தவொரு பலனும் கிடைக்காததால் இளம்பெண் தனது பணத்தை திருப்பி கேட்டு உள்ளார்.

இதற்கு அந்த ஆசாமி மறுப்பு தெரிவித்ததால் இந்த சம்பவம் குறித்து வன்ராய் போலீசில் இளம்பெண் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆன்லைனில் இருந்த வெப்சைட்டில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் பெண்ணிடம் பணம் பறித்த ஆசாமி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பதுங்கி இருந்த நிகில் குமார் (வயது27) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்து மும்பை அழைத்து வந்தனர்.

இவரிடம் நடத்திய விசாரணையில் குஜராத், மத்திய பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் காதலை புதுப்பிக்க ஆலோசனை மற்றும் சிறப்பு பூஜை நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பணம் பறித்து வந்தது தெரியவந்தது. மேலும் போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Next Story