உலக வங்கி நிதியில் நடைபெறும் திட்டப்பணிகளில் முறைகேடு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பகீர் குற்றச்சாட்டு


உலக வங்கி நிதியில் நடைபெறும் திட்டப்பணிகளில் முறைகேடு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பகீர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 28 Jan 2020 10:22 PM GMT (Updated: 28 Jan 2020 10:22 PM GMT)

புதுச்சேரியில் உலக வங்கி நிதியில் நடைபெறும் திட்டப்பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பகீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் நேற்று மாலை கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

மத்திய அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் செயல்படும் திட்டம் செயல்படுத்தல் நிறுவனம் (பி.ஐ.ஏ) மூலம் உலக வங்கி நிதி உதவியுடன் புதுச்சேரி மாநிலத்துக்கு ரூ.250 கோடி வழங்கப்பட்டது. இதன் மூலமாக புதுச்சேரி கடற்கரை சாலை மேரி கட்டிடம், தேங்காய்திட்டு துறைமுக வளாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், காரைக்காலில் 10 இடங்களில் புயல் பாதுகாப்பு மையங்கள், குறைந்த அழுத்த மின் கேபிள்கள் புதைத்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதில் மேரி கட்டிடம் கட்டுமான பணியில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. மேலும் தரமான பொருட்களை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்திய அரசு பொறியாளர் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உலக வங்கி வழங்கிய நிதியில் காங்கிரஸ் அரசு பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளது. குறிப்பாக உரிய காலத்திற்குள் பணிகள் முடிக்கப்படவில்லை.

புதுச்சேரிக்கு உலக வங்கி தலைவர் நாளை (அதாவது இன்று புதன்கிழமை) வருகிறார். அவரை, நாங்கள் நேரில் சந்தித்து பணிகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். இதில் நடந்துள்ள முறைகேடுகளை விசாரிக்க குழுவை அமைக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளோம்.

மத்திய அரசின் உதவியுடன் நடைபெறும் மணப்பட்டு கடற்கரை பகுதி திட்டப்பணி, அரியாங்குப்பத்தில் நடக்கும் கட்டுமானப்பணி உள்ளிட்டவைகள் குறித்து புதுச்சேரி பா.ஜ.க. சார்பில் தனியாக பொறியாளர் வைத்து மதிப்பீடு செய்ய உள்ளோம்.

புதுவையில் மத்திய அரசின் நிதியும், உலக வங்கியின் நிதியும் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த கவர்னர் கிரண்பெடி உத்தரவிட வேண்டும். புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி செயற்கை முறையில் நிதி தட்டுப்பாட்டை உருவாக்கி உள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் புதுச்சேரி மக்கள் பாதிக்கப்பட்டால் மத்திய அரசிடம் திட்டத்தை நிறுத்த வேண்டுமென வலியுறுத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினா்.

Next Story