பெரிய மார்க்கெட்டில் நடைபாதையை சீரமைக்காவிட்டால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவேன் சிவா எம்.எல்.ஏ. எச்சரிக்கை


பெரிய மார்க்கெட்டில் நடைபாதையை சீரமைக்காவிட்டால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவேன் சிவா எம்.எல்.ஏ. எச்சரிக்கை
x
தினத்தந்தி 28 Jan 2020 10:29 PM GMT (Updated: 28 Jan 2020 10:29 PM GMT)

புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் நடைபாதையை சீரமைக்காவிட்டால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவேன் என்று சிவா எம்.எல்.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி காந்திவீதி- நேருவீதி சந்திப்பில் பெரிய மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். காந்திவீதியில் இருந்து மார்க்கெட் உள்ளே செல்லும் வழியில் கழிவுநீர் வாய்க்காலின் மீது உள்ள சிமெண்டு சிலாப்புகள் உடைந்து கிடக்கிறது.

இதனால் மார்க்கெட் உள்ளே வரும் பொதுமக்களில் சிலர் அதில் தவறி விழுகின்றனர். இதனை சீரமைக்க டெண்டர் விடப்பட்டது. ஆனால் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில் பெரிய மார்க்கெட் வியாபாரிகள், பொதுமக்கள் சிலர் இது குறித்து தொகுதி எம்.எல்.ஏ. சிவாவிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் சிவா எம்.எல்.ஏ. நேற்று காலை பெரிய மார்கெட்டிற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி ஆணையர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள், வியாபாரிகள் உடனிருந்தனர்.

அப்போது சிவா எம்.எல்.ஏ., நகராட்சி அதிகாரிகளிடம் நடைபாதையில் சிதைந்து கிடக்கும் சிமெண்டு சிலாப்புகளை காண்பித்து, இதுபோல் இருந்தால் எப்படி மக்கள் பயமின்றி நடக்க முடியும், இதனை உடனே சரி செய்ய வேண்டும், பொது மக்களும், வியாபாரிகளும் பாதுகாப்புடன் நடந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

மார்க்கெட்டிற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். இல்லை என்றால் பெரிய மார்க்கெட் வியாபாரிகளையும், தொகுதி மக்களையும் அழைத்து வந்து புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவேன் என்று எச்சரித்தார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Next Story