புதுச்சேரி தேர்தல் ஆணையர் நியமனத்தை ரத்து செய்ததை எதிர்த்து வழக்கு கிரண்பெடிக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்


புதுச்சேரி தேர்தல் ஆணையர் நியமனத்தை ரத்து செய்ததை எதிர்த்து வழக்கு கிரண்பெடிக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 28 Jan 2020 10:33 PM GMT (Updated: 28 Jan 2020 10:33 PM GMT)

புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் நியமனத்தை ரத்து செய்த கவர்னரின் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்கும்படி கவர்னர் கிரண்பெடிக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் பதவி பல ஆண்டுகளாக காலியாக இருந்தது. இதையடுத்து இப்பதவிக்கு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலகிரு‌‌ஷ்ணனை நியமித்து, புதுச்சேரி அமைச்சரவை கடந்த ஆண்டு முடிவு தீர்மானம் இயற்றியது. இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் கேட்டு கவர்னர் கிரண்பேடிக்கு அமைச்சரவை பரிந்துரை செய்தது.

ஆனால், இந்த பரிந்துரைக்கு கிரண்பெடி ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். மாநில தேர்தல் ஆணையர் பதவிக்கு தகுந்த நபரை தேர்வு செய்ய ஒரு தேர்வுக்குழுவை அமைத்து அவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, மாநிலத் தேர்தல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடப்பட்டது. இதற்கிடையில் பாலகிரு‌‌ஷ்ணன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாநில தேர்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்டார்.

அதேநேரம், புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் பதவிக்கு அகில இந்திய அளவில் விண்ணப்பங்களை வரவேற்று தேர்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு ஒரு உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், மாநில தேர்தல் ஆணையர் பாலகிரு‌‌ஷ்ணனின் நியமனத்தை ரத்து செய்து கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி புதுச்சேரி உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், ‘புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பெடி, தனது முன்னாள் ஆலோசகர் தேவநீதிதாசை, மாநிலத் தேர்தல் ஆணையராக நியமிக்கும் வகையில், தகுதி நிபந்தனைகளில் மாற்றங்கள் செய்துள்ளார். மாநிலத் தேர்தல் ஆணையரை நியமிக்கும் அதிகார வரம்பு கவர்னருக்கு இல்லை. விதிமுறைகளுக்கு முரணாக புதுச்சேரி கவர்னர் மாளிகை செயல்படுகிறது. மாநிலத்தில் தனியாக ஒரு அரசை நடத்திவருகிறார்.

எனவே, புதுச்சேரி அமைச்சரவை நியமித்த தேர்தல் அதிகாரியின் நியமனத்தை ரத்து செய்த மத்திய அரசின் உத்தரவையும், கவர்னரின் உத்தரவையும் சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் நேற்று விசாரித்தனர். பின்னர், இந்த வழக்கிற்கு பதில் அளிக்க கவர்னருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 31-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Next Story