ஊறுகாய் வியாபாரி மனைவியை கத்தியால் வெட்டி நகை பறித்த கொள்ளையனுக்கு 7 ஆண்டு சிறை - திருச்சி கோர்ட்டு தீர்ப்பு
ஊறுகாய் வியாபாரி மனைவியை கத்தியால்வெட்டி நகை பறித்த கொள்ளையனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
திருச்சி,
திருச்சி வயலூர் சாலை சீனிவாசன் நகர் கனரா வங்கி காலனியை சேர்ந்த ஊறுகாய் வியாபாரி சரவணன் மனைவி சுபா (வயது44). இவர்களது மகள் வெங்கட லட்சுமி (21). கடந்த 6-11-2014 அன்று சுபாவும், வெங்கட லட்சுமியும் தங்களது வீட்டின் முன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா வடக்கு மைலாடி சத்திய மங்கலத்தை சேர்ந்த ராஜேஷ் என்ற ராஜேஷ்குமார் (34) மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். குடிக்க தண்ணீர் தரும்படி சுபாவிடம் கேட்டார். உடனே வெங்கடலட்சுமி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். தண்ணீரை குடித்த ராஜேஷ்குமார் சுபாவின் சுண்டு விரலில் அரிவாளால் வெட்டி அவர் அணிந்திருந்த 10 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடினார்.
உறையூர் குற்றப்பிரிவு போலீசார் ராஜேஷ்குமாரை கைது செய்து திருச்சி தலைைம குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி எஸ். கிருபாகரன் மதுரம் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட ராஜேஷ்குமாருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை, ரூ.500 அபராதமும் அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைத்தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு கூடுதல் வக்கீல் ஹேமந்த் ஆஜராகி வாதாடினார்.
இதே கோர்ட்டில் நடந்த இன்னொரு வழக்கில் தாய், மகனுக்கு தலா 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கு பற்றிய விவரம் வருமாறு:-
மணப்பாறை தாலுகா சாமியார் தோப்பு என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது55). இதே கிராமத்தை சேர்ந்த பெரியசாமி குடும்பத்தினருக்கும், சுப்பிரமணியனுக்கும் இடையே நிலப்பிரச்சி்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் 6-1-2019 அன்று சுப்பிரமணியன் வீட்டிற்கு பின்புறம் உள்ள நிலத்தில் பெரியசாமியின் மனைவி மாணிக்கம்மாள் (55), மகன் சக்திவேலு (30) ஆகியோர் பொழிக்கல் நட முயன்றனர்.
இதனை தடுக்க வந்த சுப்பிரமணியன், அவரது மகன் பாஸ்கர் ஆகியோரை சக்திவேலுவும், மாணிக்கம்மாளும் தலையில் அடித்தும், அரிவாளால் வெட்டியும் தாக்கினர். வையம்பட்டி போலீசார் அவர்களை கைது செய்து தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சக்திவேலுவுக்கும், மாணிக்கம்மாளுக்கும் நீதிபதி கிருபாகரன் மதுரம் தலா 3 வருடம் சிறைத்தண்டனை, தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறைத்தண்டனை விதித்தும் தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story