மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து: மணமகன், மணமகள் படுகாயம் - இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் பரிதாபம் + "||" + Lorry collides with motorcycle Bride and groom, injured

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து: மணமகன், மணமகள் படுகாயம் - இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் பரிதாபம்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து: மணமகன், மணமகள் படுகாயம் - இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் பரிதாபம்
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் இன்று திருமணம் நடக்க இருந்த மணமகன், மணமகள் படுகாயம் அடைந்தனர்.
ஆம்பூர், 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, கோடியூர் பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் சிலம்பரசன் (வயது 25), ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் ‌ஷூ கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரும், ஆம்பூர் அருகே உள்ள அரங்கல்துருகம் பகுதியை சேர்ந்த அமலாரோஜ் (20) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு செய்தனர். அதன்படி இவர்களது திருமணம், இன்று (வியாழக்கிழமை) திருப்பதியில் நடக்க இருந்தது.

இதற்காக நேற்று காலை சிலம்பரசன் தனது தாயார் முனியம்மாள் (40) மற்றும் மணப்பெண் அமலாரோஜ் ஆகியோரை ஒரு மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஆம்பூருக்கு புறப்பட்டார். ஆம்பூர் பைபாஸ் சாலையில் வந்த போது ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 3 பேரையும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனையடுத்து த.மு.மு.க.வினர் உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து மணப்பெண்ணை அனுப்பி வைத்தனர்.

அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஒருமணி நேரமாக ஆம்புலன்ஸ் வரவில்லை என கூறி த.மு.மு.க.வினர் போராட்டம் நடத்த தயார் ஆனார்கள். ஆனால் அதற்குள் ஆம்புலன்ஸ் வரவே மணமகனும், அவரது தாயாரும் அதில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.