கா்நாடக மந்திரிசபை விரிவாக்கம்; மேலிடதலைவர்களை சந்திக்க எடியூரப்பா இன்று டெல்லி பயணம் - இழுபறிநிலை முடிவுக்கு வருமா?


கா்நாடக மந்திரிசபை விரிவாக்கம்; மேலிடதலைவர்களை சந்திக்க எடியூரப்பா இன்று டெல்லி பயணம் - இழுபறிநிலை முடிவுக்கு வருமா?
x
தினத்தந்தி 29 Jan 2020 11:45 PM GMT (Updated: 29 Jan 2020 7:13 PM GMT)

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் குறித்து கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து பேச முதல்-மந்திரி எடியூரப்பா இன்று (வியாழக்கிழமை) டெல்லி செல்கிறார். இதனால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதில் நீடித்து வரும் இழுபறிநிலை முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு இருந்தது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு அமைந்தது.

அதன் பிறகு சட் டசபையில் காலியாக இருந்த 15 இடங்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 12 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றது. இந்த 12 பேரில் ஒருவரை தவிர மற்ற 11 பேரும் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்தவர்கள். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் அவர்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா, பிரசாரத்தில் அறிவித்தார்.

ஆனால் இடைத்தேர்தல் முடிவடைந்து 50 நாட்களுக்கு மேல் ஆகியும் மந்திரிசபை இன்னும் விஸ்தரிப்பு செய்யப்படவில்லை. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மந்திரி பதவியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். பா.ஜனதா மேலிடம், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 9 ேபருக்கும், பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 7 பேருக்கும் மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.

ஆனால் முதல்-மந்திரி எடியூரப்பாவோ தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டி இருப்பதால் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 11 பேருக்கும் மந்திரி பதவி வழங்க ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதை பா.ஜனதா மேலிடம் ஏற்கவில்லை. பா.ஜனதா மேலிடமும், எடியூரப்பா தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், மந்திரிசபை விஸ்தரிப்பு பிரச்சினை முடிவுக்கு வராமல் உள்ளது. ஜனவரி மாத இறுதிக்குள் மந்திரிசபையை விஸ்தரிப்பு செய்வதாக கடந்த 24-ந் தேதி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு கர்நாடகத்திற்கு திரும்பிய எடியூரப்பா கூறினார்.

ஆனால் இந்த மாதம் நிறைவடைய இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன. அதற்குள் மந்திரிசபை விஸ்தரிப்பு நடைபெறுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. பா.ஜனதா மேலிட தலைவர்கள் டெல்லி சட்டசபை தேர்தலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். அதனால் அவர்கள் கர்நாடக மந்திரிசபை விஸ்தரிப்பு விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை என்றும், அதனால் மந்திரிசபை விஸ்தரிப்பு மேலும் தள்ளிப்போகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மந்திரி சபையை விஸ்தரிப்பு செய்ய அனுமதி வழங்காததால், பா.ஜனதா மேலிடம் மீது எடியூரப்பா அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதுபோல் கர்நாடக மந்திரிசபை விஸ்தரிப்பு நடை பெறுவது காலதாமதமாகி வருவதால் மந்திரி பதவியை எதிர்நோக்கி இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர். மேலிட தலைவர்களை சந்திக்க எடியூரப்பாவுக்கு அனுமதி கிடைக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் மந்திரிசபை விஸ்தரிப்பு குறித்து கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து பேச டெல்லி செல்ல உள்ளதாக எடியூரப்பா கூறியுள்ளார்.

அதாவது முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று பெலகாவி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவரிடம் மந்திரிசபை விஸ்தரிப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில் கூறியதாவது:-

நான் நாளை (அதாவது இன்று) டெல்லி செல்கிறேன். எங்கள் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்க உள்ளேன். இன்னும் 2 நாட்களில் எல்லா பிரச்சினைகளும் முடிவுக்கு வரும்.

பெலகாவி மாவட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் மந்திரியாக பதவி ஏற்பார்கள். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் ஒரு சிலரை மட்டும் கைவிடும் வாய்ப்பு உள்ளது. உமேஷ்கட்டிக்கு மந்திரி பதவி கிடைக்கும். ஆனால் யாருக்கும் துணை முதல்-மந்திரி பதவி கிடைக்காது. அதே நேரத்தில் தற்போது மந்திரிசபையில் இருப்பவர்களை கைவிடும் திட்டமும் இல்லை.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

எடியூரப்பாவின் டெல்லி பயணத்தால், 50 நாட்களாக மந்திரிசபை விரிவாக்கம் செய்வதில் நீடித்து வரும் இழுபறிக்கு முடிவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Next Story