தட்டார்மடம் அருகே, அண்ணனை அரிவாளால் வெட்டிய தொழிலாளிக்கு வலைவீச்சு
தட்டார்மடம் அருகே அண்ணனை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தட்டார்மடம்,
சாத்தான்குளம் அருகே புதுக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கன். இவருடைய மனைவி இந்திரா. இவர்களுக்கு ஆறுமுகநயினார் (வயது 30), முத்துபாண்டி (24) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் கூலி தொழிலாளிகள். இந்த நிலையில் ரங்கன், தட்டார்மடம் அருகே பொத்தக்காலன்விளையைச் சேர்ந்த சுதாவை (38) 2-வதாக திருமணம் செய்தார்.
இதுதொடர்பாக ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில், கடந்த 2013-ம் ஆண்டு முத்துபாண்டி தன்னுடைய தந்தை ரங்கனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இதையடுத்து முத்துபாண்டியை சாத்தான்குளம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த முத்துபாண்டி, சாத்தான்குளம் இந்திரா நகரில் உள்ள தன்னுடைய தாயாரை பார்க்க செல்லாமல், பொத்தக்காலன்விளையில் உள்ள சித்தி சுதாவை பார்க்க சென்றார். இதையடுத்து ஆறுமுகநயினார் தன்னுடைய தம்பியை அழைப்பதற்காக, பொத்தகாலன்விளைக்கு சென்றார்.
அப்போது முத்துபாண்டி தன்னுடைய அண்ணனுடன் செல்ல மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த முத்துபாண்டி அரிவாளால் ஆறுமுகநயினாரை சரமாரியாக வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகநயினாரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முத்துபாண்டியை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story