ஆலங்குளம் அருகே, ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 3 பவுன் நகை திருட்டு - 2 பெண்களிடம் போலீசார் விசாரணை


ஆலங்குளம் அருகே, ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 3 பவுன் நகை திருட்டு - 2 பெண்களிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 29 Jan 2020 10:45 PM GMT (Updated: 29 Jan 2020 8:00 PM GMT)

ஆலங்குளம் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 3 பவுன் நகையை திருடியது தொடர்பாக 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆலங்குளம்,

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள கரிசலூர் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்வக்கனி(வயது75). இவருக்கு உடல்நிலை சரியில்லை. எனவே, நெல்லையில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதற்காக திப்பணம்பட்டியை சேர்ந்த பொன்சொர்ணம் என்பவரை உதவிக்கு உடன் அழைத்துக்கொண்டு நேற்று காலையில் பாவூர்சத்திரத்தில் இருந்து அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

அந்த பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. ஆலங்குளம் அருகிலுள்ள அத்தியூத்து பகுதியில் பஸ் சென்றபோது, தனது கழுத்தை செல்வகனி பார்த்துள்ளார். அப்போது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலி திருடப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் பஸ்சுக்குள் கூச்சல் போட்டார். அந்த பஸ் ஆலங்குளம் பஸ் நிலையம் வந்ததும், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக ஆலங்குளம் போலீசார் அங்கு விரைந்து சென்று பஸ்சுக்குள் விசாரணை நடத்தினர். அப்போது பஸ் நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறைக்குள் 2 பெண்கள் பதுங்கி இருந்தனர்.

அந்த பஸ்சில் செல்வகனி அருகில் நின்று பயணித்த அந்த 2 பெண்களும் வேகமாக இறங்கி சென்று, அந்த அறையில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. செல்வகனியும் அந்த 2 பெண்கள் மீது தான் சந்தேகம் என தெரிவித்தார். இதை தொடர்ந்து அந்த 2 பெண்களையும் போலீசார் ஆலங்குளம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story