தமிழகத்தில் ரூ.250 கோடியில் குளங்கள், ஊரணிகள் சீரமைப்பு - ஊராட்சி துறை இயக்குனர் தகவல்


தமிழகத்தில் ரூ.250 கோடியில் குளங்கள், ஊரணிகள் சீரமைப்பு - ஊராட்சி துறை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 29 Jan 2020 10:45 PM GMT (Updated: 29 Jan 2020 8:20 PM GMT)

தமிழகத்தில் கடந்த ஆண்டில் ரூ.250 கோடியில் குளங்கள், ஊரணிகள் சீரமைக்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தேசிய நீர் இயக்கம் சார்பில் இந்தோஜெர்மன் கார்ப்பரேசன் இருதரப்பு திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர் பாதுகாப்பு மற்றும் காலநிலை தழுவல் குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கு நடந்தது.

கருத்தரங்கிற்கு மாவட்ட கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனர் கே.எஸ்.பழனிசாமி கலந்துகொண்டு, கருத்தரங்கை தொடங்கி வைத்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் 2020-ம் ஆண்டுக்கான சுகாதார கையேட்டினை வெளியிட்டார். கருத்தரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனர் கே.எஸ்.பழனிசாமி பேசியதாவது:-

நீரினை பாதுகாக்கவும், சேமிக்கவும் தற்போது ஏற்பட்டுள்ள அவசியத்தை வலியுறுத்தி இந்த திட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை வராமல் தடுப்பதற்கு எந்த மாதிரியான நடவடிக்கைகள் நாம் மேற்கொள்ள வேண்டும் என்பது அவசியம். தற்போதைய காலக்கட்டத்தில் நீர் சேமிப்பு மிக அவசியமானதாக உள்ளது. தற்போது நாம் எப்படி மழைநீரை சேமிப்பது குறித்து தெரிந்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் 260 வகையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இயற்கை வளங்களை பராமரிக்கவும், மேம்படுத்திடவும் 180 பணிகளும், வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை ஆகியவற்றுக்காக 164 பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு குளங்கள், ஊரணிகள் ரூ.250 கோடி மதிப்பீட்டில் பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் பங்களிப்புடன் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 2 ஆயிரம் தடுப்பணைகள் சீரமைக்கும் பணிகள் எடுக்கப்பட்டு, தற்போது வரை 1,600 தடுப்பணைகள் முடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கூடுதல் இயக்குனர் முத்துமீனாள், கண்காணிப்பு பொறியாளர் ஏ.குத்தாலிங்கம், மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயசுதா உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story