மார்த்தாண்டத்தில் 2 கிலோ நகைகள் கொள்ளை: நகைக்கடை ஊழியர் துணையுடன் கொள்ளையர்கள் கைவரிசையா? - தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
மார்த்தாண்டத்தில் 2 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. நகைக்கடை ஊழியர் துணையுடன் கொள்ளையர்கள் கைவரிசையா? என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே விரிகோடு மடத்துவிளையில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஆசைத்தம்பி (வயது 65). இவருடைய மகன் பொன் விஜயன். இவர்கள் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தின் எதிர்புறம் கட்டிட வேலைக்கான பொருட்கள் விற்பனை செய்யும் கடை, நகை கடை நடத்தி வருகிறார்கள்.
நேற்றுமுன்தினம் அதிகாலை ஆசை தம்பியின் வீட்டில் மாடிப்படி வழியாக உள்ளே புகுந்த மர்மநபர், பூஜை அறையில் இருந்த 57 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்தார். பின்னர் அங்கிருந்த நகைக்கடைக்கான சாவியையும் எடுத்து சென்ற கொள்ளையன், நகைக்கடைக்குள் புகுந்து 1½ கிலோ நகைகளை அள்ளி சென்றார். நகை கடை, நகை கடை உரிமையாளர் வீடு என 2 இடங்களில் சுமார் 2 கிலோ தங்க நகைகள் கொள்ளை போனது.
நகை கடைக்குள் கொள்ளையடிக்கும் போது மர்ம நபரின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. ஆனால் அந்த நபரின் முகம் துணியால் மூடப்பட்டிருந்தது. இந்த துணிகர கொள்ளை சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான ஒரு நபர் மட்டும் தான் கொள்ளையில் ஈடுபட்டாரா?, கடைக்கு வெளியே யாரேனும் நின்று நோட்டமிட்டு கொள்ளைக்கு உறுதுணையாக இருந்தார்களா? என்று மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொள்ளை தொடர்பாக துப்பு துலக்க மார்த்தாண்டம் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர், களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் ரகு பாலாஜி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் நகை கடை பகுதி மற்றும் ஆசை தம்பி வீடு பகுதியில் உள்ள மேலும் சில கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், விரிகோடு பகுதியில் உள்ள சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஆசை தம்பி வீட்டில் மர்மநபர் செல்வதும், அங்கு கைவரிசை காட்டிய பிறகு, நடந்து சென்றபடி மோட்டார் சைக்கிளை நிறுத்திய இடத்துக்கு செல்வதும், தொடர்ந்து அதே மோட்டார் சைக்கிளில் அந்த நபர் பயணம் செய்து நகை கடைக்கு அருகே வாகனத்தை நிறுத்துவதும், பிறகு நகை கடையில் கைவரிசை காட்டுவதுமாக காட்சிகள் பதிவாகி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஆசை தம்பியை பற்றி நன்கு தெரிந்த நபர் தான் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் ஆசை தம்பியின் கட்டுமான பொருட்கள் உள்ள கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் யாரேனும் கைவரிசை காட்டினார்களா? என்ற ரீதியிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே சமயத்தில், கடை ஊழியர்கள் துணையுடன் இந்த கொள்ளை நடந்ததா?, கடை ஊழியர்களிடம் நைசாக பேச்சு கொடுத்து, நகை கடையின் சாவி பற்றிய விவரத்தை அறிந்த நபர் கைவரிசை காட்டினாரா? பழைய குற்றவாளிகளுக்கு இந்த கொள்ளையில் தொடர்பு இருக்கிறதா? என்று பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசாரின் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும் பழைய குற்றவாளிகளின் கைரேகைகளையும், இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபரின் கைரேகைகளையும் தடயவியல் நிபுணர்கள் ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர். இதற்கிடையே கொள்ளையன் கேரளாவுக்கு தப்பி சென்றுஇருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிப்படை போலீசார் திருவனந்தபுரத்திலும் முகாமிட்டு தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story