கன்னியாகுமரியில் இருந்து தஞ்சைக்கு கொண்டு வரப்பட்ட 2 திருவள்ளுவர் சிலைகளுக்கு மலர்தூவி வரவேற்பு


கன்னியாகுமரியில் இருந்து தஞ்சைக்கு கொண்டு வரப்பட்ட  2 திருவள்ளுவர் சிலைகளுக்கு மலர்தூவி வரவேற்பு
x
தினத்தந்தி 29 Jan 2020 10:15 PM GMT (Updated: 29 Jan 2020 9:18 PM GMT)

கன்னியாகுமரியில் இருந்து தஞ்சைக்கு கொண்டு வரப்பட்ட 2 திருவள்ளுவர் சிலைகளுக்கு மலர்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அடுத்தமாதம் (பிப்ரவரி) 21-ந் தேதி உலக திருக்குறள் மாநாடு தொடங்கி 3 நாட்கள் நடக்கின்றன. இந்த மாநாட்டிற்கு 2 திருவள்ளுவர் சிலைகள் தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக கன்னியாகுமரி மயிலாடியில் கற்களால் ஆன 2 திருவள்ளுவர் சிலைகள் வடிவமைக்கப்பட்டன. பின்னர் காந்திமண்டபம் எதிரே உள்ள அம்மா தமிழ் பீடத்தில் இருந்து 2¾ அடி உயரம் கொண்ட 450 கிலோ எடையுடைய 2 திருவள்ளுவர் சிலைகள், லோடு மினிவேனில் வைக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.

இந்த ஊர்வலம் திருநெல்வேலி, மதுரை வழியாக தஞ்சைக்கு நேற்று மாலை வந்தது. தஞ்சை மாவட்ட நூலக வளாகத்தில் திருவள்ளுவர் சிலைகளுக்கு மாவட்ட நூலக அலுவலர் சங்கர் தலைமையில் அலுவலர்கள், தமிழ் ஆர்வலர்கள் மலர்தூவி வரவேற்றனர். நிகழ்ச்சியில் மூத்த குடிமக்கள் பேரவை இணைச் செயலாளர் குருநாதன், துணைத் தலைவர் சிங்காரவேலு, தஞ்சை தமிழிசை மன்ற செயலாளர் கோபாலகிரு‌‌ஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை தமிழ்த்தாய் அறக்கட்டளை பொதுச் செயலாளர் உடையார்கோவில் குணா செய்திருந்தார். இந்த சிலைகள் கும்பகோணம், வடலூர், புதுச்சேரி, திண்டிவனம் வழியாக சென்னைக்கு செல்கிறது. அங்கிருந்து வருகிற 2-ந் தேதி திருவள்ளுவர் சிலைகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மாநாடு முடிவடைந்தவுடன் இலங்கை உரும்பிராய், காரைத்தீவு ஆகிய 2 இடங்களில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட உள்ளது.

Next Story