கள்ளக்குறிச்சி-சின்னசேலம் இடையே ரெயில் பாதை அமைக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும்- வியாபாரிகள் கோரிக்கை


கள்ளக்குறிச்சி-சின்னசேலம் இடையே ரெயில் பாதை அமைக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும்- வியாபாரிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 30 Jan 2020 4:00 AM IST (Updated: 30 Jan 2020 2:48 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி-சின்னசேலம் இடையே ரெயில் பாதை அமைக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்று பொன்.கவுதமசிகாமணி எம்.பி.யிடம் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியின் வளர்ச்சி குறித்து அனைத்து வியாபாரிகள் சங்கம், ரோட்டரி சங்கம், அரிசி ஆலை சங்கம், மருத்துவர்கள் சங்கம், நுகர்வோர் சங்கம் மற்றும் பொதுநல சங்கங்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த சங்க நிர்வாகிகள், பிரதிநிதிகளுடனான கருத்து கேட்பு கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. இதற்கு பொன்.கவுதமசிகாமணி எம்.பி. தலைமை தாங்கினார். சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் முன்னிலை வகித்தார். தி.மு.க. நகர செயலாளர் சுப்புராயலு வரவேற்றார்.

கூட்டத்தில் கள்ளக்குறிச்சி அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்வகுமார் பேசுகையில், சின்னசேலம்-கள்ளக்குறிச்சி ரெயில் பாதை அமைக்கும் பணியை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உளுந்தூர்பேட்டை-சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள புறவழிசாலையை நான்கு வழி சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். சின்னசேலம் சமூக ஆர்வலர் ரஹீம் பேசுகையில், கோமுகி அணையில் இருந்து சின்னசேலம் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால் வனத்துறைக்கு சொந்தமான நிலம் வழியாக வருகிறது. இந்த வாய்க்கால் தூர்ந்துபோய் உள்ளதால் ஏரிக்கு தண்ணீர் வராமல் வறண்ட நிலையில் உள்ளது. எனவே நீர்வரத்து வாய்க்காலை சரி செய்ய வேண்டும். ஏரியில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கள்ளக்குறிச்சி வக்கீல் செல்வநாயகம் பேசுகையில், கள்ளக்குறிச்சியில் தொடரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் புதிய தொழிற்சாலை உருவாக்க வேண்டும் என்றார். கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்க நிர்வாகி ஆதிகேசவன், கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அமைக்க வேண்டும் என்றும், டாக்டர்.ரவிச்சந்திரன், மாவட்ட தலைநகரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ அமைக்க வேண்டும் என்றும், நுகர்வோர் விழிப்புணர்வு சங்க செயலாளர் அருண்கென்னடி, கல்வராயன்மலையை தனி தொகுதியாக உருவாக்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து பேசிய பொன்.கவுதமசிகாமணி எம்.பி., பொதுமக்கள் மற்றும் உங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி, முன்னாள் எம்.எல்.ஏ. மூக்கப்பன், அரிசி ஆலை சங்க நிர்வாகி முத்துசாமி, நகைக்கடை வியாபாரிகள் சங்க தலைவர் கண்ணன், டி.எஸ்.எம்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் மனோகர்குமார் சுராணா, ரோட்டரி சங்க நிர்வாகிகள் வேலு, எத்திராஜ், வைசியா சங்க முன்னாள் தலைவர் சுப்பிரமணியன், டாக்டர்கள் குமார், ரமே‌‌ஷ், ராஜாமணி, தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story