வங்கி கடன் வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி - 3 பேர் மீது வழக்கு
வங்கி கடன் வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பெரு மாள்பட்டு பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி செல்வகுமாரி (வயது 51). இவர் முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் ஆவார். இவர் தனது கணவருடன் சேர்ந்து திருவள்ளூரை அடுத்த ஆவடியில் கேட்டரிங் சர்வீஸ் வைத்தும், தனியார் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.
இவர்கள் தங்களது தொழிலை விரிவுபடுத்துவதற்காக வங்கியில் கடன் பெற முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். இதை அறிந்த பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்த சூசைநாதன், நிரஞ்சனி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தங்கள் வங்கியில் ரூ.30 லட்சம் கடன் வாங்கி தருவதாகவும் அதற்கு நீங்கள் ரூ.6 லட்சம் தர வேண்டும் என கூறி உள்ளனர். செல்வகுமாரி மேற்கண்ட 3 பேரிடமும் அவர்கள் தெரிவித்தது போல் ரூ.6 லட்சத்தை கடந்த 2016-ம் ஆண்டில் கொடுத்துள்ளார். பணத்தை பெற்று கொண்ட அவர்கள் தாங்கள் கூறியது போல் வங்கி கடன் பெற்று தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
இதனால் செல்வகுமாரி வங்கி கடன் உடனடியாக பெற்றுத்தர வேண்டும் இல்லையெனில் தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
பணம் தர மறுப்பு தெரிவித்த 3 பேரும், நேற்று முன்தினம் பெருமாள்பட்டு பகுதியில் வந்து கொண்டிருந்த செல்வகுமாரியை வழிமறித்து தகாத வார்த்தைகளால் பேசி அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து செல்வகுமாரி செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story