அரசுக்கு எதிராக தனவேலு எம்.எல்.ஏ. ஊர்வலம் - கவர்னரிடம் புகார் மனு
புதுவை அரசுக்கு எதிராக தனவேலு எம்.எல்.ஏ. தலைமையில் ஊர்வலம் நடந்தது. முடிவில் கவர்னரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
புதுச்சேரி,
புதுவை பாகூர் தொகுதி எம்.எல்.ஏ.வான தனவேலு ஆளுங்கட்சியில் இருந்துகொண்டே அரசு, அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி திடீரென போர்க்கொடி தூக்கினார். இதைத்தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அவருடன் அவரது மகனான இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருந்த அசோக்ஷிண்டேவும் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்தநிலையில் நீதிகேட்டு பேரணி நடத்தப்போவதாக தனவேலு எம்.எல்.ஏ. அறிவித்தார்.
அதன்படி நேற்று காலை முதலே பாகூர் மற்றும் புதுவையின் கிராம பகுதிகளில் இருந்து வேன், பஸ், கார், இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் ஏராளமானவர்கள் திரண்டு வந்தனர். தங்களது வாகனங்களை ரோடியர் மில் திடலில் நிறுத்திவிட்டு சுதேசி மில் அருகே திரண்டனர்.
அங்கிருந்து தனவேலு எம்.எல்.ஏ. தலைமையில் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தில் வீர வன்னியர் பேரவை, வன்னியர் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் மறைமலையடிகள் சாலை, அண்ணாசாலை, நேரு வீதி, மிஷன் வீதி, ரங்கப்பிள்ளை வீதி வழியாக புதுவை தலைமை தபால் நிலையத்தை அடைந்தது. அங்கு அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது, பெருகிவரும் கள்ள லாட்டரியை ஒழிக்காமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பதும், கேசினோ என்னும் பேரழிவை ஏற்படுத்தும் அபாயகரமான திட்டத்தை அமல்படுத்த துடிப்பதும் நியாயம்தானா? வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்னாச்சு? கிராமம் மற்றும் நகரப்பகுதியில் கோடிக்கணக்கில் செலவு செய்து பலகோடி ஊழல் செய்து ஹைமாஸ் விளக்கு அமைத்து இன்று காட்சி பொருளாக நிற்கும் அவல நிலை ஏன்? என்று கோஷங்களை எழுப்பினார்கள்.
ஊர்வல முடிவில் தனவேலு எம்.எல்.ஏ. மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் கிரண்பெடியை சந்தித்து முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலை அளித்தனர்.
ஊர்வல இறுதியில் பொதுமக்கள் மத்தியில் தனவேலு எம்.எல்.ஏ. பேசியதாவது:-
பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர்காக்கும் மருந்து இல்லை. ஆம்புலன்சை இயக்கவும் ஆள் இல்லை. கடந்த 4 வருடமாக இதே நிலைதான். இதை சட்டமன்றத்திலும் பேசியுள்ளேன்.
ஆனால் ஆளும் கட்சி என்பதால் எதையும் கேட்கக்கூடாது என்கிறார்கள். இந்த அரசு என்ன செய்கிறதோ அதைத்தான் மக்கள் பெறவேண்டும் என்கிறார்கள். கேள்வி கேட்கும் எம்.எல்.ஏ.க்கள் நசுக்கப் படுகிறார்கள்.
அரசு சார்பு நிறுவனங்கள் மூடப்படுகின்றன. அனைத்து துறைகளிலும் ஆட்சியாளர்களால் கொள்ளை அடிக்கப்படுகிறது. இதை நான் தட்டிக்கேட்டால் கட்சியிலிருந்து நீக்குகிறார்கள். முதல்-அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர், சபாநாயகர், அமைச்சர்கள் ஊழல் பட்டியலை கவர்னரை சந்தித்து சமர்ப்பிக்க உள்ளேன். நான் கொடுக்கும் ஆதாரங்கள் அதிர்ச்சிகரமானவை. இந்த ஆதாரங்கள் புதுவையில் மாற்றத்தை உருவாக்கும். ஆட்சியாளர்களுக்கு எதிராக இவற்றை கஷ்டப்பட்டு சேர்த்துள்ளேன்.
சிலரது அரசியலுக்கு இது முற்றுப்புள்ளியாக அமையும். என்னை இப்போது கட்சியை விட்டு இடைநீக்கம் செய்துள்ளனர். என்னை எம்.எல்.ஏ. பதவியிலிருந்து நீக்க (பறிக்க) முடியுமா? உங்களால் முடியாது. முடிந்தால் நீக்கி பாருங்கள். எம்.எல்.ஏ. பதவியை கொடுப்பதும், பறிப்பதும் மக்கள்தான்.
இவ்வாறு தனவேலு எம்.எல்.ஏ. பேசினார்.
அதைத்தொடர்ந்து தனவேலு எம்.எல்.ஏ. கவர்னர் கிரண்பெடியை சந்தித்து புகார் மனு அளித்தார். அதில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல்களை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story