டெங்கு காய்ச்சலில் காதலி இறந்ததால் வேதனை: கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


டெங்கு காய்ச்சலில் காதலி இறந்ததால் வேதனை: கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 31 Jan 2020 5:15 AM IST (Updated: 30 Jan 2020 10:19 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் டெங்கு காய்ச்சலில் காதலி இறந்ததால் வேதனை அடைந்த கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை,

கோவை செல்வபுரம் சுண்டக்காமுத்தூர் சாலை சேத்துமாவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவருடைய மனைவி மணிமேகலை. இவர்களது மகன் பாரிமான் என்ற வசந்த் (வயது 19). இவர் கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-வது ஆண்டு படித்து வந்தார்.

இவர் அசோக்நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 வரை படித்தார். அப்போது அவர் தன்னுடன் படித்த மாணவியை காதலித்து வந்தார். அவர்கள் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் வசந்தின் காதலி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட் டார். அதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை. இதனால் வசந்த்தின் காதலி சிகிச்சை பலனின்றி கடந்த 2 மாதத்துக்கு முன்பு பரிதாபமாக இறந்தார்.

இதனால் மனவேதனை அடைந்த வசந்த் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். அவர், நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்லவில்லை. இதனால் அவருடன் படிக்கும் நண்பர்கள் வசந்தின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போனை எடுத்து பேசவில்லை. சிறிது நேரம் கழித்து அவர்களின் வாட்ஸ்-அப்புக்கு வசந்த் ஒரு மெசேஜ் அனுப்பினார்.

அதில் தனது காதலி இறந்து விட்டதால், இந்த உலகில் வாழ எனக்கு விருப்பம் இல்லை. காதலி சென்ற இடத்துக்கே நான் செல்கிறேன் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே வசந்தின் தந்தையின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.

அவர் தனது மகனை வீட்டில் தேடினார். ஆனால் அவர் வீட்டில் இல்லை. உடனே நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது சேத்துமாவாய்க்கால் அருகே ஒரு மரத்தில் வசந்த் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வசந்த் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காதலி இறந்த வேதனையில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story