வீடுகளில் தனிநபர் கழிப்பறை அமைக்கும் திட்டம்: அதிகாரிகளின் செயல்பாடுகள் சரியில்லை - கலெக்டர் பேச்சு


வீடுகளில் தனிநபர் கழிப்பறை அமைக்கும் திட்டம்: அதிகாரிகளின் செயல்பாடுகள் சரியில்லை - கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 31 Jan 2020 4:00 AM IST (Updated: 30 Jan 2020 10:50 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் தனிநபர் கழிப்பறை திட்டத்தில் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் சரியில்லை என்று கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.

வேலூர், 

மகாத்மா காந்தி நினைவு தினமான ஜனவரி 30-ந் தேதி தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி வேலூர் மாவட்ட தொழுநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் தொழுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் வேலூர் ஊரீசு கல்லூரியில் நேற்று நடந்தது. காசநோய் பிரிவு துணை இயக்குனர் அய்யப்பன் பிரகாஷ், தொழுநோய் பிரிவு துணை இயக்குனர்கள் பிரீத்தா, வெற்றிசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருத்தரங்கிற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தொழுநோய் ஒழிப்பு தினத்தையொட்டி நடந்த பேச்சு, வினாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

நமது முன்னோர்கள் நதி மற்றும் ஆற்றின் அருகே வசித்து வந்தனர். ஆற்றின் அருகே நாகரீகம் தோன்றி, அதன்பின்னர் அங்கு நகரம் உருவானதாக கூறப்படுகிறது. முன்னோர்கள் வீட்டின் கழிவுநீர் ஆற்றில் கலக்காதவாறு கட்டமைப்பு ஏற்படுத்தியிருந்தனர். ஆனால் தற்போது ஆற்றின் அருகே யாருமே குடியிருப்பதில்லை. இதற்கு காரணம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதுதான். வீட்டின் கழிவுநீர், தொழிற்சாலைகளின் கழிவுநீரை என்றைக்கு ஆற்றில் கலந்து விட்டோமோ, அன்றுமுதல் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது. தற்போது குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

பூமிக்குள் இருந்து கிடைக்கும் தண்ணீரில் பல்வேறு தாதுக்கள் உள்ளன. அதனை சுத்திகரிக்கும்போது அந்த தாதுக்கள் இல்லாத தண்ணீர் கிடைக்கிறது. அந்த தண்ணீரை குடிப்பதினால் எந்த சத்தும் உடம்புக்கு கிடைக்காது. காற்று, குடிநீர் மாசு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புதிதாக நோய்கள் ஏற்படுகின்றன. மனித உயிர் விலை மதிப்பற்றது. தற்போதைய காலக்கட்டத்தில் குழந்தை வளர்ப்பது பெரும் சவாலாக உள்ளது. மேலும் பரவக்கூடிய தொற்றுநோய்கள் அதிகரித்து வருகிறது.

திறந்தவெளியில் மலம் கழிப்பதால் நோய் பரவும் வாய்ப்புள்ளது. இதனை தடுக்க மத்திய அரசு அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக உதவித்தொகையும் வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தில் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் சரியில்லை. வீடுகளில் தனிநபர் கழிப்பறை அமைக்க பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிப்பதில்லை.

வேலூர் மாவட்டத்தில் 160 தொழுநோயாளிகள் உள்ளனர். அவர்களுக்கு தேவையான சிகிச்சை மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தொழுநோயாளிகள் எண்ணிக்கையை குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கலெக்டர் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில், நர்சிங் கல்லூரி மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொழுநோய் நலக்கல்வியாளர் பிச்சாண்டி நன்றி கூறினார்.

Next Story