காங்கிரஸ் எம்.எல்.ஏ. தலையை துண்டிப்போம் என கோஷம்; பா.ஜனதா தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு


காங்கிரஸ் எம்.எல்.ஏ. தலையை துண்டிப்போம் என கோஷம்; பா.ஜனதா தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 30 Jan 2020 10:45 PM GMT (Updated: 30 Jan 2020 6:13 PM GMT)

காங்கிரஸ் எம்.எல்.ஏ. யு.டி.காதரின் தலையை துண்டிப்போம் என கோஷமிட்ட பா.ஜனதா தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மங்களூரு, 

மங்களூருவில் கடந்த திங்கட்கிழமை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜனதா சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய ராணுவத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். இதையொட்டி நடந்த பேரணியில் பங்கேற்ற பா.ஜனதாவின் சில தொண்டர்கள் குழுவாக சேர்ந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது அவர்கள், மங்களூரு தொகுதி எம்.எல்.ஏ. (காங்கிரஸ்) யு.டி.காதருக்கு எதிராக முழக்கமிட்டனர். அதாவது, எங்கள் விவகாரத்தில் நீங்கள் (யு.டி.காதர்) தலையிட கூடாது. மீறி தலையிட்டால் உங்கள் தலையை துண்டிப்போம் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதுபற்றி யு.டி.காதர் எந்த கருத்தும் தெரிவிக்காமலும், போலீசில் புகார் அளிக்காமலும் மவுனமாக இருந்து வருகிறார். அதே வேளையில் இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் தாமாக முன்வந்து (சூமோடா) வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று காங்கிரசார் போராட்டம் நடத்தினர். இதைதொடர்ந்து காவூர் போலீசார், காங்கிரஸ் எம்.எல்.ஏ. யு.டி.காதருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பா.ஜனதா தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதாவது, இந்திய தண்டனை சட்டப்பிரிவு 504, 506, 507 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story