விழுப்புரத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம் - திருமாவளவன் எம்.பி., ஜி. ராமகிரு‌‌ஷ்ணன் பங்கேற்பு


விழுப்புரத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம் - திருமாவளவன் எம்.பி., ஜி. ராமகிரு‌‌ஷ்ணன் பங்கேற்பு
x
தினத்தந்தி 31 Jan 2020 4:00 AM IST (Updated: 31 Jan 2020 12:05 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து விழுப்புரத்தில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் திருமாவளவன் எம்.பி., ஜி. ராமகிரு‌‌ஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழுப்புரம்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்தும், இவற்றை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனை எதிர்த்து நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பில் விழுப்புரத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிரு‌‌ஷ்ணன், போராட்டத்தை தொடங்கி வைத்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பேசினார்.

இதில் துரை.ரவிக்குமார் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் புகழேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. பு‌‌ஷ்பராஜ், மாவட்ட துணை செயலாளர் ஜெயச்சந்திரன், காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் குலாம்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் முஸ்தாக்தீன் உள்பட அனைத்து கட்சி முக்கிய நிர்வாகிகள், முஸ்லிம் இயக்கத்தினர் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இவர்கள் அனைவரும் விழுப்புரம் ரெயில் நிலையத்திலிருந்து நான்குமுனை சந்திப்பு வரை ஒருவருக்கொருவர் கைகோர்த்து நின்று மத்திய அரசை கண்டித்து கோ‌‌ஷம் எழுப்பினர்.

முன்னதாக தொல்.திருமாவளவன் எம்.பி., நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கூறியதற்காக மதவாத பயங்கரவாதி கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டவர் காந்தியடிகள். இந்த கோட்சே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர். இந்த இயக்கத்தை அன்றைக்கே உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் தடை செய்தார். இதுபோன்ற இயக்கங்களின் தூண்டுதலின் பேரிலும், மதத்தின் பெயரில் மக்களை பிளவுப்படுத்தும் வகையிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை மோடி அரசு கொண்டு வந்திருக்கிறது.

அதோடு மட்டுமின்றி தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு இந்த இரண்டையும் நடைமுறைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து குடியுரிமை திருத்த சட்டத்தை மோடி அரசு கைவிட வேண்டும். இதை கைவிடவில்லை என்றால் தேசிய அளவில் எங்களின் அறவழிப்போராட்டம் தொடரும். வருகிற 2-ந் தேதி தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடைபெற உள்ளது. அதில் பெறப்படுகிற அனைத்து படிவங்களும் குடியரசு தலைவரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதேப்போல் திண்டிவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோதண்டன் தலைமையிலும் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

இந்த போராட்டம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துஉள்ளனர். விழுப்புரத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி., பொன்முடி எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிரு‌‌ஷ்ணன் உள்ளிட்ட 504 பேர் மீதும் செஞ்சியில் மஸ்தான் எம்.எல்.ஏ. உள்பட 300 பேர் மீதும், திண்டிவனத்தில் கோதண்டன் உள்பட 200 பேர் மீதும் ஆக மொத்தம் 1004 பேர் மீது மனித சங்கிலி நடத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதேபோல் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னசேலத்தில் முஸ்லிம்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story