சந்தவாசல் அருகே, விவசாயியை திருமணம் செய்த பெண் என்ஜினீயர்


சந்தவாசல் அருகே, விவசாயியை திருமணம் செய்த பெண் என்ஜினீயர்
x
தினத்தந்தி 30 Jan 2020 11:15 PM GMT (Updated: 30 Jan 2020 9:09 PM GMT)

சந்தவாசல் அருகே பெண் என்ஜினீயர் விவசாயியை திருமணம் செய்துள்ளார்.

கண்ணமங்கலம்,

திருவண்ணாமலை மாவட்டம், சந்தவாசல் அருகே உள்ள முனியந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். அவருடைய மகள் அரசம்மா (வயது 27), என்ஜினீயர். லட்சுமணன் தனது மகள் அரசம்மாவுக்கு பல இடங்களில் வரன் தேடினார். அப்போது ராணுவ பணி, வெளிநாட்டு பணி, தனியார் மற்றும் அரசு நிறுவனத்தில் பணிபுரியும் பலர் பெண் கேட்டு வந்தும் அவர் மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் தேப்பனந்தல் கிராமத்தில் வசிக்கும் லட்சுமணனின் சகோதரி எல்லம்மாள் (65) தனது மகன் விவசாயியான சிவக்குமாருக்கு அரசம்மாவை பெண் கேட்டார். இதனையடுத்து லட்சுமணன் தனது மகள் அரசம்மாவிடம், சிவக்குமாரை திருமணம் செய்து கொள்ள விருப்பமா? என கேட்டுள்ளார். அவரும் மறுக்காமல் சம்மதம் தெரிவித்துள்ளார். அப்போது அவர் எனக்கு தாய் வீட்டு சீதனமாக டிராக்டர் வேண்டும் என்றார்.

அதைத் தொடர்ந்து கடந்த 27-ந் தேதி சிவக்குமாருக்கும், அரசம்மாவுக்கும் திருமணம் நடந்தது. மகளின் ஆசைப்படி லட்சுமணன் மருமகன் சிவக்குமாருக்கு, விவசாய பணிக்காக டிராக்டர் மற்றும் டில்லர் வாங்கி கொடுத்துள்ளார்.

இக்காலக்கட்டத்தில் பல லட்சம் ஊதியம் வாங்கும் நபர்களுக்கு பெண் கொடுக்க பலர் விரும்புவார்கள். ஆனால் விவசாயிக்கு தனது மகளை திருமணம் செய்து, சீதனமாக டிராக்டர் வழங்கிய லட்சுமணன் செயல் மிகவும் பாராட்டுக்குரியது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சீதனமாக வழங்கிய டிராக்டருக்கு பூஜை செய்து, அரசம்மாவை அதில் அமர வைத்து சிவக்குமார் தனது வயலில் உழவு செய்தார்.

இதுகுறித்து என்ஜினீயர் அரசம்மா கூறுகையில், சிவக்குமார் எனது அத்தை மகன் என்றாலும், விவசாய பணி செய்து வருகிறார். நமது நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள் தான். எனவே சிவக்குமாரை திருமணம் செய்துகொண்டேன். தற்போது நான் அரசுப்பணிக்கு படித்து வருகிறேன். அரசு வேலை கிடைக்கும் என நம்புகிறேன். அதுவரை எனது கணவரின் விவசாய பணிக்கு உதவி செய்வேன்’ என்றார்.

Next Story