போலீஸ் காவல் இன்று முடிகிறது: கேரளாவுக்கு அழைத்துச் சென்று பயங்கரவாதிகளிடம் மீண்டும் விசாரணை
சப்-இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற பயங்கரவாதிகளை மீண்டும் கேரள மாநிலத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.மேலும், சப்-இன்ஸ்பெக்டரை கொன்ற போது பயங்கரவாதிகள் அணிந்திருந்த ஆடைகளும் சிக்கின.
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் வில்சன் (வயது 57). இவர் கடந்த 8-ந் தேதி இரவு தமிழக-கேரள எல்லையான களியக்காவிளை சந்தைரோடு சோதனை சாவடியில் பணியில் இருந்தார்.
அப்போது அவரை பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய திருவிதாங்கோடு அடப்புவிளை அப்துல் சமீம் (29), நாகர்கோவில் இளங்கடை மாலிக்தினார் நகர் பகுதியை சேர்ந்த தவுபிக் (27) ஆகியோர் துப்பாக்கியால் சுட்டும், வெட்டுக்கத்தியால் வெட்டியும் படுகொலை செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக களியக்காவிளை போலீசார் பயங்கரவாதிகள் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேர் மீதும் கொலை வழக்கு, உபா சட்டப்பிரிவு, ஆயுதச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நிலையில் தலைமறைவான 2 பேரையும் கடந்த 14-ந் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களை பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.
தற்போது கோர்ட்டு உத்தரவின் பேரில் 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து பயங்கரவாதிகள் 2 பேரிடமும் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த போலீஸ் காவல் இன்று (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. போலீஸ் காவல் விசாரணையின் போது, பயங்கரவாதிகள் பல்வேறு தகவல்களை கூறி உள்ளனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்களை போலீசார் கேரள மாநிலத்தில் கைப்பற்றினர்.
பயங்கரவாதிகள் ஆடைகள் சிக்கின
வில்சனை கொன்ற பிறகு அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரும் இரவோடு இரவாக கேரள மாநிலம் வழியாக பஸ் மற்றும் ரெயில் மூலமாக தப்பிச் சென்றனர். வடகரா ரெயில் நிலையத்தில் இருந்து இறங்கியுள்ளனர். பின்னர் அவர்கள் தங்களது முகத்தோற்றத்தை வித்தியாசப்படுத்துவதற்காக அங்குள்ள ஒரு சலூனில் இருவரும் தலைமுடியை திருத்தம் செய்து, முகச்சவரம் செய்துள்ளனர். அதன் பிறகு வடகரா பகுதிக்கு சென்று அங்குள்ள ஜவுளிக்கடையில் புத்தாடைகளை வாங்கி, அங்குள்ள ஒரு மசூதி அருகில் ஆடைகளை மாற்றியுள்ளனர். பழைய ஆடைகளை அதே பகுதியில் மறைவான இடத்தில் போட்டு விட்டுச் சென்றனர். மீண்டும் ரெயிலில் ஏறி கர்நாடக மாநில பகுதிக்கு சென்ற போது தான் போலீசார் உடுப்பி பகுதியில் அவர்களை பிடித்தனர். இது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
ஆனால் போலீசார் இதுவரை பயங்கரவாதிகள் மாற்றிய ஆடைகளை கைப்பற்றவில்லை. மேலும் முடிதிருத்தம் மற்றும் முகச்சவரம் செய்த கடையிலும் நேரடியாக விசாரணை நடத்தவில்லை. எனவே நேற்று முன்தினம் மாலை அவர்கள் 2 பேரையும் துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையிலான போலீசார் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் கேரள மாநிலத்துக்கு அழைத்துச் சென்றனர். கோழிக்கோடு மாவட்டம் வடகரா பகுதிக்கு சென்ற அவர்கள் அங்குள்ள உள்ளூர் போலீசார் உதவியுடன் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரும் ஒரு சிறிய மசூதி அருகே வீசி எறிந்து விட்டுச் சென்ற பழைய ஆடைகளை கைப்பற்றினர். அதில், அப்துல் சமீமின் ஒரு பேன்ட் மற்றும் சட்டையும், தவுபிக்கின் பேன்ட் ஆகியவையும் இருந்தன. புதிய ஆடைகள் வாங்கிய ஜவுளி கடைக்கும் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
தாசில்தார்கள் முன்னிலையில்...
அதன் பிறகு சலூன் கடைக்கு சென்றும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை குமரி மாவட்டத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்ட 2 தாசில்தார்கள் முன்னிலையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 2 பேரையும் நேற்று பிற்பகலுக்கு பிறகு அங்கிருந்து குமரி மாவட்டம் அழைத்து வந்தனர். இன்று மாலை அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அப்போது பயங்கரவாதிகள் 2 பேரையும் கர்நாடகா மற்றும் மராட்டிய மாநில பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் மேலும் போலீஸ் காவல் வழங்கும்படி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய போலீசார் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story