தாய்மொழியில் படித்தால் படைப்பாற்றல் பெருகும் - ஈரோட்டில் தமிழருவி மணியன் பேச்சு


தாய்மொழியில் படித்தால் படைப்பாற்றல் பெருகும் - ஈரோட்டில் தமிழருவி மணியன் பேச்சு
x
தினத்தந்தி 30 Jan 2020 10:30 PM GMT (Updated: 30 Jan 2020 9:09 PM GMT)

தாய்மொழியில் படித்தால் படைப்பாற்றல் பெருகும் என்று ஈரோட்டில் நடந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் தமிழருவி மணியன் கூறினார்.

ஈரோடு, 

தேசிய நல விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மகாத்மா காந்தி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி ஈரோடு மல்லிகை அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இயக்கத்தின் தலைவர் எஸ்கேஎம்.மயிலானந்தன் தலைமை தாங்கினார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

காந்தியத்தை பற்றி அறிந்துகொள்வதற்கு அவர் எழுதிய சத்தியசோதனையை முழுமையாக படிக்காவிட்டாலும் 3 பக்கமுடைய முன்னுரையையாவது படிக்க வேண்டும்.

பல்வேறு மொழிகளை அறிந்திருந்த காந்தி, சத்தியசோதனையை தாய் மொழியான குஜராத்தியில் எழுதி உள்ளார். தாய் மொழியில் படித்தால் மட்டுமே படைப்பாற்றல், கற்பனை வளம் பெருகும். ஆனால் நமது குழந்தைகள் தமிழை படிப்பதில்லை. படிக்கவும் நாம் விடுவதில்லை.

காந்தி 11 மகா விரதங்களை கடைபிடிக்க வலியுறுத்தினார். சத்தியம், அகிம்சை, பிரம்மச்சரியம், திருடாமை, உடைமை இன்மை, உடல் உழைப்பு, நாவடக்கம், அஞ்சாமை, தீண்டாமை ஒழிப்பு, சமய நல்லிணக்கம், சுதேசி ஆகிய 11 விரதங்களையும் அவர் கடைபிடித்தார். இதில் சத்தியம் என்பது உண்மையாக இருத்தல், அகிம்சை என்பது வன்முறையில்லாமல் செயல்படுதல், பிரம்மச்சரியம் என்பது ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டுடன் வாழுதல் போன்ற அவர் கூறும் ஒழுக்கத்தை நாமும் கடைபிடிப்போம்.

காந்திய பொருளாதாரம் பற்றி அவர் தெளிவாக விளக்கி உள்ளார். அதன்படி முதலீடு செய்தவருக்கு லாபத்தில் 40 சதவீதமும், தொழிலாளர்களுக்கு 40 சதவீதமும், நுகர்வோருக்கு 20 சதவீதமும் பங்கீடு செய்து கொடுத்தால், இந்தியா சிறந்தநாடாக மாறிஇருக்கும். காந்தியம் தோற்காது. காந்தியத்தை தோற்கடிக்கிறோம்.

இவ்வாறு தமிழருவி மணியன் கூறினார்.

நிகழ்ச்சியில் வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், எஸ்.கே.எம். தீவன நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம்.சந்திரசேகர், நந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் வி.சண்முகன், ஏ.ஈ.டி. பள்ளிக்கூட தாளாளர் காசியண்ண கவுண்டர் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தேசிய நல விழிப்புணர்வு இயக்கத்தின் செயலாளர் ஆர்.ஜி.சந்திரம் நன்றி கூறினார்.

Next Story