திருச்சி பா.ஜ.க. நிர்வாகி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது - ஆயுதங்கள், மோட்டார் சைக்கிள் பறிமுதல்


திருச்சி பா.ஜ.க. நிர்வாகி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது - ஆயுதங்கள், மோட்டார் சைக்கிள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 Jan 2020 11:00 PM GMT (Updated: 30 Jan 2020 9:09 PM GMT)

திருச்சியில் பா.ஜ.க. நிர்வாகி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி, 

திருச்சி வரகனேரி பென்சனர ்தெருவை சேர்ந்தவர் விஜயரகு (வயது 39). இவர் பா.ஜ.க. பாலக்கரை பகுதி மண்டல செயலாளராக இருந்தார். கடந்த 27-ந் தேதி அதிகாலை காந்திமார்க்கெட் 6-ம் எண் நுழைவுகேட் அருகே விஜயரகு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களும் எழுப்பினார்கள்.

திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அதேபகுதியை சேர்ந்த பாபு என்கிற மிட்டாய்பாபு (வயது 25) விஜயரகுவின் மகளை ஒருதலையாக காதலித்து வந்ததும், இதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்து விஜயரகுவை தனது கூட்டாளியுடன் சேர்ந்து கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

கொலையாளிகள் நாகப்பட்டினத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்று தேடினார்கள். ஆனால் அங்கு அவர்கள் இல்லை. இதையடுத்து சென்னை பூக்கடை பகுதியில் பதுங்கி இருந்த மிட்டாய்பாபு, அவருடைய கூட்டாளியான திருச்சி தாராநல்லூர் அலங்கநாதபுரத்தை சேர்ந்த ஹரிபிரசாத் (20) ஆகியோரை கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்தனர்.

திருச்சியில் அவர்களிடம் விசாரித்தபோது, மிட்டாய்பாபு, ஹரிபிரசாத்துடன் சேர்ந்துகொண்டு, திருச்சி இ.பி.ரோட்டை சேர்ந்த சுடர்வேந்தன் (19), சஞ்சய் என்கிற சச்சின் (19), அரியமங்கலம் காமராஜர்நகரை சேர்ந்த முகமதுயாசர் (19) ஆகிய 3 பேரும் காந்திமார்க்கெட் வாழைக்காய்மண்டி அருகே கடந்த 26-ந் தேதி கொலைக்கு சதிதிட்டம் தீட்டியது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சஞ்சீவிநகர் பகுதியில் பதுங்கி இருந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 5 பேரையும் நேற்று திருச்சி முதலாவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முன்னதாக கைதான மிட்டாய்பாபு போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதுபற்றி போலீஸ் தரப்பில் கூறுகையில், “விஜயரகுவின் மகளை காதலித்து வந்தேன். அவரை திருமணம் செய்து கொள்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரிடம் சென்று பெண் கேட்டேன்.

அப்போது அவர் என்னை திட்டி அவமானப்படுத்தி அனுப்பி விட்டார். மேலும், என் மீது போலீஸ் நிலையத்தில் பலமுறை புகார் அளித்து அவ்வப்போது கைது செய்வதற்கும் காரணமாக இருந்தார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்தேன்” என்று கூறியதாக தெரிவித்தனர்.

Next Story