காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மனித சங்கிலி


காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மனித சங்கிலி
x
தினத்தந்தி 30 Jan 2020 10:30 PM GMT (Updated: 30 Jan 2020 9:59 PM GMT)

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

காஞ்சீபுரம், 

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மத்திய அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில், காஞ்சீபுரம் காந்திரோடு தேரடி அருகே மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சார்பில் பலர் பங்கேற்றனர்.

அப்போது, அவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற கோரி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் கலைந்து சென்ற அவர்கள் காந்திரோடு ஜவுளிகடை சத்திரம் அருகே கோஷங்களை எழுப்பி திடீரென ஆர்ப்பாட்டத்தில் சிறிது நேரம் ஈடுபட்டனர்.

திருப்போரூர்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சமுதாய மக்கள் ஒற்றுமை இயக்கம் ஒருங்கிணைப்பில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், ம.தி.மு.க.வினர், முஸ்லிம்கள் உள்ளிட்ட பலர் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும் தேசிய கொடி மற்றும் பதாகைகளை கையில் ஏந்தியவாறு பழைய மாமல்லபுரம் சாலை ஓரமாக மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதற்கு காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், திருப்போரூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

உத்திரமேரூர்

இதேபோல காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பஸ் நிலையம் அருகே குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி பொறுப்பாளர் ராபட் என்ற மல்லிமாறன், தி.மு.க. நகர பொருளாளர் ஹாருன், மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த ஜாகீர் முன்னிலை வகித்தார். இதில் மனிதநேய மக்கள் கட்சி, த.மு.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story