அரசு பணியிடங்களை நிரப்பக்கோரி பட்டதாரி இளைஞர்கள் ஊர்வலம் - நாராயணசாமியிடம் மனு


அரசு பணியிடங்களை நிரப்பக்கோரி பட்டதாரி இளைஞர்கள் ஊர்வலம் - நாராயணசாமியிடம் மனு
x
தினத்தந்தி 31 Jan 2020 4:56 AM IST (Updated: 31 Jan 2020 4:56 AM IST)
t-max-icont-min-icon

அரசு பணியிடங்களை நிரப்பக்கோரி பட்டதாரி இளைஞர்கள் அமைதி ஊர்வலமாக சென்று முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் மனு கொடுத்தனர்.

புதுச்சேரி, 

புதுவை அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பட்டதாரி இளைஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் சட்டசபை நோக்கி அமைதி ஊர்வலம் நடத்தப்போவதாக அவர்கள் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று புதுவை சுதேசி மில் அருகே பட்டதாரி இளைஞர்கள் கூடினார்கள். அங்கிருந்து சட்டசபை நோக்கி அமைதி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு அலெக்ஸ் ஆண்ட்ரூஸ் தலைமை தாங்கினார்.

ஊர்வலம் மறைமலையடிகள் சாலை, அண்ணாசாலை, நேரு வீதி, மிஷன் வீதி, ரங்கப்பிள்ளை வீதி வழியாக தலைமை தபால் நிலையத்தை அடைந்தது. அங்கு கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

இதனிடையே இளைஞர்களின் ஊர்வலம் குறித்து அறிந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தபால் நிலையத்துக்கு வந்து பட்டதாரி இளைஞர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள், கோரிக்கை மனு ஒன்றை நாராயணசாமியிடம் வழங்கினார்கள்.

காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்புவதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இளைஞர்களிடம் நாராயணசாமி விளக்கினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப 4 கட்டமாக கூட்டங்கள் நடத்தி உள்ளோம். காவல்துறையில் 400 பேர், 64 சப்-இன்ஸ்பெக்டர்கள், 24 எழுத்தர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டி உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளை அழைத்து பேச உள்ளேன்.

இதுதவிர மற்ற அரசு துறைகளிலும் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அவற்றையும் நிரப்ப நடவடிக்கை எடுப்போம். புதுவை மாநிலத்தை பொறுத்தவரை 14 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 1,700 ஓட்டல்கள் உள்ளன. இவற்றின் மூலம் கணிசமான அளவுக்கு மக்கள் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர்.

தனியார் துறைகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர். அது நமக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story