குடியுரிமை சட்ட போராட்டத்தில் வன்முறையை தூண்டும் பேச்சு: உத்தரபிரதேச டாக்டர் மும்பையில் கைது


குடியுரிமை சட்ட போராட்டத்தில் வன்முறையை தூண்டும் பேச்சு: உத்தரபிரதேச டாக்டர் மும்பையில் கைது
x
தினத்தந்தி 31 Jan 2020 5:23 AM IST (Updated: 31 Jan 2020 5:23 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை சட்ட போராட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய உத்தரபிரதேச டாக்டர் கபீல்கானை மும்பை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி. மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 2 ஆண்டுகளுக்கு முன் ஆக்சிஜன் குறைபாட்டால் 63 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இந்த சம்பவத்தில் குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமானவர் என, கைது செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் டாக்டர் கபீல்கான். எனினும் விசாரணைக்கு பிறகு கபீல்கான் குற்றம் அற்றவர் என விடுதலை செய்யப்பட்டார்.

இந்தநிலையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த அவர் நேற்று முன்தினம் இரவு மும்பை விமான நிலையத்தில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேசம் மற்றும் மும்பை போலீசார் இணைந்து அவரை கைது செய்தனர்.

கடந்த மாதம் உத்தரபிரேதச மாநிலத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வாசலில் நடந்த குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் கபீல்கான் கலந்து கொண்டார். அப்போது அவர், இரு பிரிவினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த உத்தரபிரதேச போலீசார் மும்பை வந்தபோது அவரை கைது செய்து உள்ளனர்.

கைதான டாக்டர் கபீல்கான் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும் அவதூறாக பேசி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story