5 மந்திரிகளிடம் பதவியை பறிக்க முடிவு; புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க எடியூரப்பா திட்டம்


5 மந்திரிகளிடம் பதவியை பறிக்க முடிவு; புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க எடியூரப்பா திட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2020 12:26 AM GMT (Updated: 31 Jan 2020 12:26 AM GMT)

கர்நாடகத்தில் மந்திரிசபை விரிவாக்கத்தின் போது 5 மந்திரிகளிடம் பதவியை பறிக்கவும், புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும் முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதைதொடர்ந்து முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 11 எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்கவும், இதற்காக மந்திரிசபை விரிவாக்கம் செய்யவும் பா.ஜனதா மேலிட தலைவர்களிடம் முதல்-மந்திரி எடியூரப்பா அனுமதி கேட்டு வருகிறார். ஆனால் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 11 பேரில் 6 பேருக்கு மட்டுமே மந்திரி பதவி வழங்க கட்சி மேலிடம் அனுமதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஏனெனில், பிற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க பா.ஜனதா மேலிடம் விரும்பவில்லை என்றும், கட்சியின் மூத்த தலைவர்களுக்கு மந்திரி பதவி வழங்க விரும்புவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 11 எம்.எல்.ஏ.க்களுக்கும் கண்டிப்பாக மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று எடியூரப்பா கட்சி மேலிட தலைவர்களை வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. இதனால் மந்திரிசபை விரிவாக்கம் தள்ளிப்போன வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்திக்க டெல்லி சென்றுள்ள முதல்-மந்திரி எடியூரப்பா, மந்திரிசபையை மாற்றி அமைக்க முடிவு செய்திருப்பதாகவும், அதுதொடர்பாக கட்சி மேலிட தலைவர்களிடம் அனுமதி பெற திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது மந்திரி பதவியில் உள்ள 5 பேரை நீக்கிவிட்டு, அவர்களுக்கு பதிலாக புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க எடியூரப்பா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது மந்திரிகளாக உள்ள மாதுசாமி, கோட்டா சீனிவாஸ் பூஜாரி, சி.சி.பட்டீல், பசவராஜ் பொம்மை, சசிகலா ஜோலே ஆகிய 5 பேரின் செயல்பாடுகள் எடியூரப்பாவுக்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

அவர்கள் 5 பேரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளை சரியாக நிர்வகிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக போலீஸ் மந்திரியாக இருக்கும் பசவராஜ் பொம்மை சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் கவனம் செலுத்தவில்லை என்றும், மங்களூரு கலவரத்தில் 2 பேர் துப்பாக்கி சூட்டுக்கு பலியானது, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கர்நாடகத்தில் நடந்து வரும் தொடர் போராட்டங்கள் காரணமாக பசவராஜ் பொம்மை மீது எடியூரப்பா அதிருப்தி அடைந்திருப்பதாக தெரிகிறது.

அதுபோல, சட்டத்துறை மந்திரியான மாதுசாமியும், அந்த துறையை நிர்வகிக்க தவறி விட்டதாக ஏராளமான புகார்கள் எடியூரப்பாவுக்கு சென்றுள்ளது. அத்துடன் பசவராஜ் பொம்மை, மாதுசாமி ஆகியோர் மந்திரி பதவியில் நீடிப்பதை பா.ஜனதா மேலிட தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் அவர்கள் 2 பேரையும் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுபோன்று,மந்திரிகளான சி.சி.பட்டீல், கோட்டா சீனிவாஸ் பூஜாரி, சசிகலா ஜோலேவின் செயல்பாடுகள் மீது எடியூரப்பாவுக்கு திருப்தி ஏற்படாத காரணத்தால், அவர்கள் 3 பேரும் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.

இவர்கள் 5 பேருக்கு பதிலாக கே.ஜி.போப்பையா, முருகேஷ் நிரானி, ராஜுகவுடா நாயக், காலப்பா ஆச்சார், சுனில்குமார் ஆகிய 5 பேருக்கும் மந்திரி பதவி வழங்க எடியூரப்பா திட்டமிட்டு இருப்பதாகவும், அதுகுறித்து பா.ஜனதா மேலிட தலைவர்களுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று மாலையில் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களிடம் கூறுகையில், 'மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படுமா? அல்லது மந்திரிசபை மாற்றி அமைக்கப்படுமா? என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்' என்றார்.

Next Story