திருவண்ணாமலையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் - ரூ.800 கோடிக்கு பணப்பரிவர்த்தனை பாதிப்பு


திருவண்ணாமலையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் - ரூ.800 கோடிக்கு பணப்பரிவர்த்தனை பாதிப்பு
x
தினத்தந்தி 31 Jan 2020 10:30 PM GMT (Updated: 31 Jan 2020 4:50 PM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ரூ.800 கோடிக்கு பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை, 

அனைத்து வங்கி ஊழியர்கள் சம்மேளன சங்கம் சார்பில் ஊதிய உயர்வு, வாரத்தில் 5 நாட்கள் வேலை, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திலும் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இதில் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாரத வங்கி அதிகாரிகள் துணை மண்டல செயலாளர் இளஞ்செழியன் தலைமை தாங்கினார். வங்கி ஊழியர்கள் உதவி பொதுச்செயலாளர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். கனரா வங்கியின் அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்க செயலாளர் கணபதி வரவேற்றார். தேசிய வங்கி கூட்டமைப்பின் மண்டலச் செயலாளர் சாந்தகுமார் உள்பட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

வங்கி ஊழியர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக வங்கி சேவை மிகவும் பாதிக்கப்பட்டது. வங்கிகளுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வங்கிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. பொதுமக்கள் பலர் ஏ.டி.எம்.மையங்களுக்கு சென்று பணம் எடுத்துக் கொண்டனர். மேலும் பலர் அங்குள்ள எந்திரங்கள் மூலம், தங்களுடைய வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்தினர். இதனால் ஏ.டி.எம்.மையங்களில் கூட்டம் அலைமோதியது.

இந்த போராட்டம் குறித்து வங்கி நிர்வாகிகள் கூறியதாவது:-

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 260 வங்கி கிளைகள் கலந்து கொண்டுள்ளன. இதனால் சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை.

இந்த போராட்டம் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் ரூ.800 கோடிக்கு பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. எங்களது கோரிக்கை தொடர்பாக வருகிற மார்ச் மாதம் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்வோம். இப்போராட்டம் நாளையும் நடக்கும். இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆரணி நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஆந்திரா வங்கி, விஜயா வங்கி, சிண்டிகேட் வங்கி, பஞ்சாப் நே‌‌ஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் பணம் செலுத்தவும், எடுக்கவும் வந்திருந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி போன்றவை செயல்பட்டன.

தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் பணபரிமாற்றம் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டது.

Next Story