ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து, குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து, குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 1 Feb 2020 4:15 AM IST (Updated: 31 Jan 2020 10:59 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு மாவட்டத்தில் இருந்து திரளான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். முன்னதாக கூட்டம் தொடங்கியதும், கூட்ட அரங்கில் இருந்த விவசாயிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து கூட்ட அரங்கு முன்பாக நின்று கொண்டு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மக்கள் கருத்து கேட்க தேவையில்லை என அறிவித்த மத்திய அரசை கண்டித்தும், விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோ‌‌ஷமிட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து விவசாயிகள் மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாவட்ட வேளாண்மை உற்பத்தி மற்றும் குறைதீர்க்கும் குழு உறுப்பினர் மாவை. கணேசன்:-

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் டெல்டா பகுதி விவசாயிகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் மானியம் வழங்கி வருகிறது. இது பட்டாதாரர்களுக்கு மட்டும் கிடைக்கிறது. சாகுபடிதாரர்களுக்கும், சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் மானியம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

5-ம், 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதை ரத்து செய்ய வேண்டும். இந்த திட்டத்தினால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். வேளாண்மை மற்றும் பொறியியல் துறை மூலம் வழங்கப்படும் கை டிராக்டர், டிராக்டர், நடவு எந்திரம் வாங்குவதற்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை கால தாமதமின்றி விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

விவசாயி மணியன்:-

வேதாரண்யம் ஒன்றியத்தில் தொடர் மழையினால் விவசாயம் நன்றாக இருந்தது. திடீர் மழையாலும், அதிக பனியாலும் சம்பா நெல் வயல்களில் புகையான் கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் நெல் பதம் அதிகமாக உள்ளதாலும், பயிர் அதிக உயரமாக வளர்ந்ததாலும் அனைத்து நெற்பயிர்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. வேதாரண்யம் விவசாய துறையினர் பெருமுயற்சி எடுத்து புகையான் ஒழிப்பதற்கு தக்க அறிவுரைகள் கூற வேண்டும்.

வேளாண்துறை அதிகாரிகள் பயிர் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் சென்று பார்வையிட வேண்டும். பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு நிவாரணம் மற்றும் பயிர்க்காப்பீடு தொகை வழங்க வேண்டும்.

விவசாயி முஜீபு‌‌ஷரீக்:-

விவசாயிகளின் நலன் கருதி கால தாமதமின்றி அறுவடை எந்திரங்களை அரசு வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். வேட்டைகாரனிருப்பு கிராமத்தில் உள்ள விவசாயிகளின் நலன் கருதி நபார்டு வங்கி உதவியோடு ஒருங்கிணைந்த உற்பத்தி வேளாண்மை மையம் அமைத்து தர வேண்டும்.

கோவில்பத்து கிராமத்தில் நவீன சேமிப்பு கிடங்கை சீர்செய்து மீண்டும் திறக்க வேண்டும். வேட்டைகாரனிருப்பு கிராமத்திற்கு வேளாண்மை பகுதி நேர அலுவலகம் மற்றும் தோட்டக்கலை துறை பகுதிநேர அலுவலகம் திறக்க வேண்டும்.

சரபோஜி:-

ஐவநல்லூர், பாலையூர் பகுதிகளில் பன்றிகள் விவசாய நிலத்தை வீணடித்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விளைந்த கதிர்களை அறுவடை செய்வதற்கு அறுவடை எந்திரம் இல்லாததால் முதிர்ந்த நெல் கதிர்கள் வீணாகிறது. எனவே காலத்தின் அவநிலை அறிந்து மாவட்டத்திற்கு அதிகமாக அறுவடை எந்திரங்களை கொண்டு வரவேண்டும்.

கோபிகணேசன்:-

காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். குடி மராமத்து பணிகளில் முறைகேடுகள் நடக்காதவாறு உண்மையான விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும். விடுபட்டுள்ள பயிர்காப்பீட்டு தொகையை உடனே கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டத்தில் வேளாண்மை துறை இணை இயக்குனர் பன்னீர் செல்வம், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடுக்காட்டு ராஜா உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story