எம்.எல்.ஏ.க்களின் உரிமையை பறிக்க பா.ஜனதா அரசு முயற்சி; டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு


எம்.எல்.ஏ.க்களின் உரிமையை பறிக்க பா.ஜனதா அரசு முயற்சி; டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 1 Feb 2020 4:45 AM IST (Updated: 1 Feb 2020 12:20 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் உரையாற்றும்போது கோஷம் போடக்கூடாது என்று கூறுவது, எம்.எல்.ஏ.க்களின் உரிமையை பறிக்க பா.ஜனதா அரசு முயற்சி செய்வதாக டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டினார்.

பெங்களூரு, 

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. எடியூரப்பா பதவி ஏற்கும்போது, பழிவாங்கும் அரசியல் செய்ய மாட்டேன் என்று கூறினார். ஆனால் இப்போது அவர் எதிர்க்கட்சிகளை பழிவாங்கி வருகிறார். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பா.ஜனதா எம்.எல்.ஏ.க் களின் தொகுதிகளுக்கு அதிக நிதி ஒதுக்கியதை நாங்கள் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகளின் தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை குறைப்பது சரியல்ல. சட்டசபையில் கவர்னர் உரையாற்றும்போது, யாரும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போடக்கூடாது என்று சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார். நாங்கள் யாரும் உட்கார்ந்து பாடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கும் அரசியல் அனுபவம் உள்ளது.

பா.ஜனதாவினர் ஆட்சிக்கு வந்த பிறகு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். நாடு முழுவதும் மத்திய பா.ஜனதா அரசு சர்வாதிகார போக்கில் செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்பு கவர்னர் உரையின்போது, எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜனதாவினர் என்ன செய்தனர் என்பதை சற்று நினைவுகூர்ந்து பார்க்க வேண்டும்.

இப்போது எம்.எல்.ஏ.க்களின் உரிமைகளை பறிக்க பா.ஜனதா அரசு முயற்சி செய்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தால் உலக அரங்கில் இந்தியாவின் மரியாதை போய் கொண்டிருக்கிறது. ஒரே நாட்ைட சேர்ந்த மக்களிடையே வேறுபாட்டை உருவாக்குவது ஏன் என்று வெளிநாட்டினர் கேட்கிறார்கள். நமது நாட்டில் முதலீடு செய்ய தொழில் முதலீட்டாளர்கள் பின்வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துவிட்டது.

இந்தியாவில் தொழில் முதலீட்டாளர்கள், வணிகர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வரிசையில் நிற்கிறார்கள். நான் சமீபத்தில் டெல்லி சென்றிருந்தேன். அங்கு அமெரிக்க தூதரகம் முன்பு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கையில் விண்ணப்ப படிவத்துடன் காத்திருந்ததை பார்க்க முடிந்தது. எங்கள் கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு சென்றனர். அவர்கள் என்ன ஆக வேண்டும் என்று கருதி சென்றார்களோ அந்த நோக்கத்தை அடையட்டும். கர்நாடக காங்கிரசுக்கு புதிய தலைவரை நியமிப்பதில் எந்த குழப்பமும் இல்லை.

இவ்வாறு டி.கே. சிவக்குமார் கூறினார்.

Next Story