தமிழகத்தில் புதிய கால்நடை மருத்துவ கல்லூரிகள் தொடங்குவது பற்றி ஆலோசிக்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி


தமிழகத்தில் புதிய கால்நடை மருத்துவ கல்லூரிகள் தொடங்குவது பற்றி ஆலோசிக்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 1 Feb 2020 4:15 AM IST (Updated: 1 Feb 2020 12:44 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் புதிய கால்நடை மருத்துவ கல்லூரிகள் தொடங்குவது பற்றி ஆலோசிக்கப்படும் என்று கோபியில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.

கடத்தூர்,

கோபியில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரி ரூ.1¼ கோடி செலவில் பன்முக கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்கள்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கால்நடை பராமரிப்பு துைற சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் உடுமலைபேட்டை, கோபியில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிகள் பன்முக மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன.

இன்று (அதாவது நேற்று) திறக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படும். மூத்த கால்நடை டாக்டர்கள், பணியாளர்கள் பணியாற்றுவார்கள். கால்நடைகள் நோய் வாய்ப்பட்டால் அவைகளை பரிசோதிக்க ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் எக்ஸ்ரே, ஸ்கேன் கருவிகள் உள்ளன.சேலம் மாவட்டம் தலைவாசலில் 1,700 ஏக்கர் பரப்பளவில் ரூ.1000 கோடி மதிப்பில் தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவ கல்லூரி வருகிற 9-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதை தொடங்கி வைக்கிறார்.

புதிதாக தொடங்கப்பட உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டே மாணவ-மாணவிகள் சேர்க்கை நடைபெறும். மேலும் இங்கு பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு செமினார் வகுப்புகளும் நடத்தப்பட உள்ளன. இங்கு ஆடு, கோழிகளின் இறைச்சியை நவீன முறையில் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக கால்நடை மருத்துவ கல்லூரிகள் உருவாக்க முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசிக்கப்படும். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கால்நடைகளுக்காக அம்மா ஆம்புலன்ஸ் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இன்னும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கோபி அருகே உள்ள வெள்ளாளபாளையம், நஞ்சைகோபி ஊராட்சிகளில் 100 பயனாளிகளுக்கு ரூ.40¼ லட்சம் மதிப்பில் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் கதிரவன் விழாவுக்கு தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்ைடயன், உடுமலை ராகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகளை வழங்கினார்கள். கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் குழந்தைசாமி, கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், தாசில்தார் விஜயகுமார், அ.தி.மு.க. மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பி சுப்பிரமணியம், கோபி கூட்டுறவு சங்க தலைவர் காளியப்பன் மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்.

Next Story