வெள்ளகோவில் அருகே ரூ.4¾ லட்சம் திருடிய 2 பேர் கைது


வெள்ளகோவில் அருகே ரூ.4¾ லட்சம் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 31 Jan 2020 9:30 PM GMT (Updated: 31 Jan 2020 7:15 PM GMT)

வெள்ளகோவில் அருகே ரூ.4¾ லட்சம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வெள்ளகோவில்,

ஈரோடு மாவட்டம், சித்தோட்டில் வி.எம்.டி. என்ற பெயரில் சொந்தமான பால் பண்ணை உள்ளது. இந்த பால் பண்ணையில் மேலாளராக அதே பகுதியை சேர்ந்த சரவணகுமார்(வயது 41) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்த பால் பண்ணைக்கு ஈரோடு, திருப்பூர் மாவட்ட கிராமங்களில் இருந்து வேன்கள் மூலம் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. கிராமங்களில் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு அந்தந்த வேன்கள் மூலமாக முகவர்கள் வழியாக உற்பத்தியாளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி நத்தக்காடையூர் பகுதியை சேர்ந்த முகவரிடம் உற்பத்தியாளருக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக மேலாளர் சரவணகுமார், வேன் டிரைவர் பழனிசாமியிடம் ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்தை கொடுத்தார். டிரைவர் பழனிசாமி அந்த பணத்தை ஓட்டுனர் இருக்கைக்கு பின்னால் இருக்கும் பெட்டியில் வைத்து கொண்டார்.

அதன்பிறகு அந்த வேனில் வெள்ளகோவிலுக்கு வந்தார். அங்கு ஒரு மளிகைக்கடை அருகே வேனை நிறுத்தினார். பிறகு வேனின் பின்னால் வந்து மளிகை கடை அருகே இருந்த பால் கேன்களை ஏற்றினார்.

அதன்பிறகு ஓட்டுனர் இருக்கைக்கு வந்து பெட்டியில் பணம் இருக்கிறதா? என்று பார்த்த போது அவற்றை காணவில்லை. அந்த இடத்தில் ஏற்கனவே பால் பண்ணையில் வேலை பார்த்த சித்தோடு காந்தி நகரை சேர்ந்த பிரதீஸ்வரன்(25), சித்தோடு செல்லப்பம்பாளையத்தை சேர்ந்த ஸ்ரீசிவசங்கர்(22), ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்த கருப்பையா ஆகிய 3 பேரை டிரைவர் பழனிசாமி பார்த்து உள்ளார். வேனில் இருந்த ரூ.4¾ லட்சம் திருடு போனதற்கும் அவர்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் இது குறித்து பால் பண்ணை மேலாளர் சரவணகுமாரிடம் அவர் கூறினார்.

இதையடுத்து சரவணகுமார் பணம் திருட்டு போனது குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் காங்கேயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஹேமலதா, வெள்ளகோவில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள். பின்னர் இது தொடர்பாக நேற்று சித்தோடு பகுதியில் பிரதீஸ்வரன், ஸ்ரீசிவசங்கரை பி்டித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் பால் வேனில் இருந்த பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களிடம் இருந்த ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மீட்கப்பட்டது. பின்னர் இருவரையும் கைது செய்து காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி இருவரையும் காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்த திருட்டு தொடர்பாக கருப்பையாவை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story