அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1¾ கோடி நிலுவை தொகை; வங்கி கணக்கில் வரவு வைப்பு
உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை ரூ.1¾ கோடி ஆன்லைன் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
உடுமலை,
உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தை கரும்பு அரவை பருவமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலை அரவைக்கு தேவையான கரும்பை கொள்முதல் செய்துகொள்வதற்கு எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. வரையறுக்கப்பட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஆலை அங்கத்தினர்களான கரும்பு விவசாயிகளிடம் இருந்து ஆலைப்பகுதி, குமரலிங்கம், கணியூர், நெய்க்காரப்பட்டி, பழனி ஆகிய கோட்ட கரும்பு அலுவலகங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் கரும்பு பதிவு செய்து ஆலை அரவைக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 2018-2019 கரும்பு அரவைப்பருவத்திற்கு உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம், சூலூர், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய தாலுகாக்களில் உள்ள ஆலை அங்கத்தினர்களான கரும்பு விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு அரைக்கப்பட்டது. 2018-2019 அரவைப்பருவத்தில் மொத்தம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 57 டன் கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு அரவை செய்யப்பட்டது.
இந்த கரும்பிற்கு டன் ஒன்றுக்கு கிரையத்தொகையாக வாகன வாடகையையும் சேர்த்து ரூ.2,850 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதில் கரும்பு ஏற்றி வரும் வாகனத்திற்கான வாடகையாக ஆலை நிர்வாகம் டன் ஒன்றுக்கு ரூ.100 வீதம் வழங்கியது. ஒரு டன் கரும்பிற்கு கரும்பு கிரையத்தொகையாக ரூ.2,612.50 வீதம் ஆலைநிர்வாகம் வழங்கியது. இந்த தொகையை ஆலை நிர்வாகம் அந்தந்த கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தியிருந்தது.
இந்த நிலையில் கரும்பு தொகைக்கான விலையில் கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகையாக ஒரு டன் கரும்பிற்கு ரூ.137.50 என்று தமிழக அரசு நிர்ணயித்திருந்த தொகையை விவசாயிகள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.
இதில் கடந்த ஆண்டு (2019) ஏப்ரல் மற்றும் மே ஆகிய 2 மாதங்கள் கரும்பு சப்ளை செய்திருந்த விவசாயிகளுக்கு 52 ஆயிரத்து 155 டன்களுக்கான கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகையை தமிழக அரசு கடந்த டிசம்பர் மாதம் அந்தந்த கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு ஆன்லைன் மூலம் நேரடியாக அனுப்பி வைத்தது.
இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் கரும்பு அரவை நிறைவு நாளான ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி வரை கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு 71 ஆயிரத்து 902 டன்னுக்கான கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகையை தமிழக அரசு அந்தந்த கரும்பு விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு ஆன்லைன் மூலம் நேற்று முன்தினம் நேரடியாக செலுத்தியுள்ளது.
அதன்படி 1,020 விவசாயிகளுக்கு தமிழக அரசு கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ.1 கோடியே 70 லட்சத்து 57 ஆயிரத்து 837 வழங்கியுள்ளது. இந்த ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து நிலுவைத்தொகைகளும் வழங்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story