அலகுமலையில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை அகன்ற திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு


அலகுமலையில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை அகன்ற திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு
x
தினத்தந்தி 1 Feb 2020 3:30 AM IST (Updated: 1 Feb 2020 1:48 AM IST)
t-max-icont-min-icon

பொங்கலூர் அலகுமலையில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண 10 இடங்களில் அகன்ற திரையில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொங்கலூர், 

பொங்கலூர் அருகே உள்ள அலகுமலையில் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் சார்பில் 3-வது ஆண்டு ஜல்லிக்கட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பெருந்தொழுவு செல்லும் ரோட்டில் அலகுமலை முருகன் கோவிலின் மேற்கு புறத்தில் உள்ள இடத்தில் நடத்துவற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 400 அடி நீளத்திற்கு இருபுறமும் கேலரிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 20 ஆயிரம் பேர் அமர்ந்து ஜல்லிக்கட்டை பார்க்க முடியும். ஜல்லிக்கட்டு காளைகள் சீறிப்பாய வாடி வாசல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளைகள் பாதுகாப்பாகவும், தடுப்புகளை தாண்டி செல்லாதவாறு உயரமான அளவில் கம்புகள் கட்டப்பட்டுள்ளன.

கேலரி அமைக்கும் பணிகளை வருவாய் துறையினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் என பல்வேறு துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில் மதியம் போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தை பார்வையிட்டார்.

அப்போது முக்கிய விருந்தினர்கள் வரும் வழி, கண்காணிப்பு கேமரா, பொதுமக்களுக்கு குடிநீர் ஏற்பாடு, மாடு பிடி வீரர்கள் காயம் அடைந்தால் அவர்களை உடனடியாக மருத்துவ சிகிச்சை மற்றும் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை வசதியுடன் கூடிய மருத்துவர்கள் கொண்ட குழு, ஆம்புலன்ஸ் வசதி, மாடுகளுக்கு காயம் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவ வசதி கொண்ட ஆம்புலன்ஸ், பொதுமக்களுக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி மருத்துவ முகாம், போலீஸ் கட்டுபாட்டு அறை, விருந்தினர்கள் மற்றும் பொதுமக்களுக்கான கழிப்பிட வசதி, ஜல்லிக்கட்டு போட்டியை காண வருபவர்களின் வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகியன குறித்து கேட்டறிந்தார்.

மேலும் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்த பிறகு ஏராளமானோர் உள்ளே சென்று போட்டியை காண முடியாமல் ஏமாற்றம் அடையக்கூடாது என்பதற்காக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை சுற்றிலும் தென்னந்தோப்புகளில் 10 இடங்களில் அகன்ற திரை அமைக்கப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

தற்போது கடுமையான வெயில் வாட்டி எடுப்பதால் பொதுமக்களுக்கு ஆங்காங்கே குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான பணிகள் முடிவுற்று இன்று (சனிக்கிழமை) மாலைக்குள் ஜல்லிக்கட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவுறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை மாடு பிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான பரிசுப்பொருட்கள் குவிந்துள்ளன. மேலும் பலரும் போட்டிக்கு பரிசுப்பொருட்களை வாரி வழங்கி வருகிறார்கள்.

போட்டிக்கான ஏற்பாடுகளை அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் தலைவர் லீடர் டேப் பழனிசாமி, செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் சுப்பிரமணியம், துணைச்செயலாளர் அர்ஜூனன், ஒருங்கிணைப்பாளர் சிலீக் ராமசாமி, அமைப்பாளர் பாலசுப்பிரமணியம், இணை ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ், துணைத்தலைவர் மூர்த்தி, இணைச்செயலாளர் செந்தில்குமார், வரவேற்புக்குழு தலைவர் லோகநாதன், ஆலோசகர் சண்முகம் உள்பட நிர்வாகிகள் தயார் செய்து வருகிறார்கள்.


Next Story