ஸ்ரீரங்கத்தில் வீட்டு வாசலில் கோலம் போட்ட சிறுமி கார் மோதி பலி - தாய் கண்முன்னே பரிதாபம்
ஸ்ரீரங்கத்தில் வீட்டு வாசலில் கோலம் போட்ட சிறுமி கார் மோதி தாய் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
ஸ்ரீரங்கம்,
திருச்சி ஸ்ரீரங்கம் கீழஉத்தரவீதியை சேர்ந்தவர் மாதவன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சொர்ணலட்சுமி. இவர்களின் மகள் தீபரேகா(வயது 8). இவள் ஸ்ரீரங்கத்தில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில் நேற்று அதிகாலை தாயும், மகளும் எழுந்து வீட்டு வாசலை சுத்தம் செய்தனர்.
அப்போது சிறுமி தீபரேகா கோலம் போட, சொர்ண லட்சுமி அருகே நின்று மகள் கோலம் போடும் அழகை கண்டு ரசித்துக்கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த கார், திடீரென சிறுமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதைப்பார்த்து சொர்ணலட்சுமி அலறினார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி தீபரேகா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் தான் அந்த காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. தாய் கண் முன்னே சிறுமி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story