அண்ணனை கொலை செய்த வழக்கில் தம்பிக்கு ஆயுள் தண்டனை பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு


அண்ணனை கொலை செய்த வழக்கில் தம்பிக்கு ஆயுள் தண்டனை பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 1 Feb 2020 4:30 AM IST (Updated: 1 Feb 2020 2:24 AM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லியில் சொத்துக்காக அண்ணனை கொலை செய்த வழக்கில் தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

பூந்தமல்லி,

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், கற்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் தோசைகுமார் (வயது 33). இவர் கடந்த 2014-ம் ஆண்டு குடிபோதையில் தான் ஒருவனை கொலை செய்ததாகவும், அதற்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாகவும் உளறி உள்ளார். இது பற்றி தகவலறிந்த நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தோசைகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணையில் செம்பரம்பாக்கத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவரின் சொத்தை விற்பதற்கு அவரது அண்ணன் மணி இடையூறாக இருந்ததால் தியாகராஜனுக்கு உதவி செய்யும் நோக்கில் மணியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும், அதே போல் சில மாதங்களுக்கு முன்பு தியாகராஜனின் தந்தை தேவராஜ் (65), என்பவரையும் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் கூறி உள்ளார்.

இதையடுத்து 2 கொலை வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்த நசரத்பேட்டை போலீசார் தோசைகுமார் (33), தியாகராஜன்(32), கார் டிரைவர் சரவணன்(28), உள்ளிட்ட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2-ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போதே தோசைகுமார் இறந்துவிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி சாந்தி முன்னிலையில் நேற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட தியாகராஜனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மற்றவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story