சாகுபடி குறித்து பதிவு செய்ய இ-அடங்கல் செயலி; செயல்படுத்த தோட்டக்கலைத்துறை தீவிரம்


சாகுபடி குறித்து பதிவு செய்ய இ-அடங்கல் செயலி; செயல்படுத்த தோட்டக்கலைத்துறை தீவிரம்
x
தினத்தந்தி 1 Feb 2020 3:30 AM IST (Updated: 1 Feb 2020 2:54 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை பகுதியில் இ-அடங்கல் செயலியை செயல்படுத்துவதில் தோட்டக்கலைத்துறை தீவிரம் காட்டி வருகிறது.

போடிப்பட்டி,

உலகத்தை உள்ளங்கைக்குள் அடக்கும் வகையில் நவீன விஞ்ஞானம் வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நவீன விஞ்ஞான வளர்ச்சியை விவசாயத்துக்கும் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் பணிச்சுமை குறையவும் கூடுதல் வருவாய் பெறவும் வேளாண் உற்பத்தி அதிகரிக்கவும் வாய்ப்புகள் உருவாகும். எனவே விவசாயம் சார்ந்த விஷயங்களை நவீனப்படுத்தும் பணியில் மத்திய-மாநில அரசுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

அந்த வகையில் மாநில அரசு அறிமுகப்படுத்திய உழவன் செயலி விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இதன்மூலம் அரசின் மானியத்திட்டங்கள், விவசாயம் சார்ந்த ஆலோசனைகள், விதை மற்றும் உரம் இருப்பு விபரங்கள் மட்டுமல்லாமல் பருவநிலை மாற்றங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. இதன்மூலம் விவசாயிகள் திட்டமிட்டு பணியாற்ற முடிவதால் இழப்பைத் தவிர்த்து கூடுதல் வருவாய் பெற முடிகிறது. இந்த நிலையில் இதேபோல விவசாயிகளுக்கு உதவும் செயலி ஒன்றை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுவாக உரம், பூச்சிமருந்து, பயிர்க்கடன் போன்றவற்றை அரசு மூலம் பெறும்போது விவசாயிகள் எவ்வளவு இடத்தில் என்ன பயிர் செய்துள்ளார்கள் என்பதைத்தெரிவிக்கும் அடங்கல் சான்று பெறுவது அவசியமாகிறது. இதனை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து விவசாயிகள் பெறவேண்டும்.

இந்த நிலையில் அரசு அறிமுகப்படுத்தியுள்ள இ-அடங்கல் செயலி மூலம் எளிதாகவும், விரைவாகவும் விவசாயிகள் அடங்கல் பெற்றுக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் தற்போதைய நிலையில் மானியத்திட்டங்களிலோ பயிர்க்கடன் மூலமாகவோ அரசின் உதவி பெறாமல் சொந்த செலவில் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு இந்த அடங்கல் தேவையில்லாததாக உள்ளது.

இதனால் இந்த விவசாயி பயிரிட்டுள்ள பயிர் விபரம் குறித்து அரசுப்பதிவேட்டில் பதிவாவதில்லை. எனவே பயிர் பரப்பு கணக்கிடுவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆனால் இந்த எளிமையான பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ள இ-அடங்கல் செயலியை பயன்படுத்தி விவசாயிகளே அடங்கல் கோரி விண்ணப்பிக்க முடியும்.

இவ்வாறு முழுமையாக பயிர் விபரங்கள் பதிவு செய்யப்படுவதால் அரசு மானியங்கள், விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் போன்றவற்றை விவசாயிகளின் தேவையறிந்து அரசு முழுமையாக வழங்க வழி கிடைக்கும். இந்த நிலையில் இந்த இ-அடங்கல் திட்டத்தை முழுமையாக விவசாயிகளிடம் கொண்டுசேர்க்கும் பணியில் உடுமலை தோட்டக்கலைத்துறையினர் வேகம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:-

வருவாய் கிராமத்தில் உள்ள அனைத்து சர்வே எண்களின் விவரம், நில உரிமையாளர் பெயர், பட்டா எண், நில மதிப்பீடு மற்றும் வேளாண் பயிர்கள் தொடர்பான விவரங்கள் 'இ-அடங்கல்' செயலியில் பதிவு செய்யப்படவேண்டும்.

இந்த செயலியின் மூலம் விவசாயிகள் விவரங்கள் பதிவு செய்வது மட்டுமல்லாமல் உரிய கட்டணம் செலுத்தி அடங்கல் சான்றும் பெறமுடியும்.எனவே இ-அடங்கல் திட்டத்தின் பலன் முழுமையாக விவசாயிகளுக்குப்போய் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் தோட்டக்கலைத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story