சப்-இன்ஸ்பெக்டர் கொலை: போலீஸ் காவல் முடிந்து பயங்கரவாதிகள் 2 பேர் கோர்ட்டில் ஆஜர்
சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை தொடர்பாக 10 நாள் போலீஸ் காவல் விசாரணைக்கு பிறகு பயங்கரவாதிகள் 2 பேரும் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் 14-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ந் தேதி இரவு பணியில் இருந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையில் திருவிதாங்கோடு அடப்புவிளையை சேர்ந்த அப்துல் சமீம் (29), நாகர்கோவில் இளங்கடை மாலிக்தினார் நகர் பகுதியை சேர்ந்த தவுபிக் (27) ஆகிய 2 பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
மேலும் களியக்காவிளை போலீசார் பயங்கரவாதிகள் 2 பேர் மீதும் கொலை வழக்கு, உபா சட்டப்பிரிவு, ஆயுதச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த 2 பேரையும் கடந்த 14-ந் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பி ரெயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 2 பயங்கரவாதிகளையும் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து 21-ந் தேதி நாகர்கோவில் கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 2 பயங்கரவாதிகளும் ஆஜர்படுத்தப்பட்டனர். போலீஸ் தரப்பில் 28 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி அருள் முருகன், பயங்கரவாதிகளை 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவிட்டார்.
பின்னர் போலீஸ் காவலின் போது பயங்கரவாதிகள் 2 பேரிடமும் போலீசார் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர். இதில், குடியரசு தின விழாவை சீர்குலைப்பதற்காக பயங்கரவாதிகள் புதிய அமைப்பை உருவாக்கி அதற்கான சதி திட்டம் தீட்டியிருந்தனர். இதனை அறிந்த உளவுத்துறை போலீசார், தவுபிக், அப்துல் சமீம் ஆகியோரின் கூட்டாளிகள் பலரை கைது செய்தனர். தங்களுடைய கூட்டாளிகளை போலீசார் பிடித்ததால், போலீசாரை அச்சுறுத்துவதற்காக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை பயங்கரவாதிகள் கொன்றது தெரியவந்தது.
மேலும் பயங்கரவாதிகளை கேரள மாநிலம், காயல்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி, துப்பாக்கி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை கொன்ற போது பயங்கரவாதிகள் அணிந்திருந்த ஆடைகளை, கேரள மாநிலத்தில் வீசி எறிந்தனர். அந்த ஆடைகளையும் போலீசார் கைப்பற்றினர். இதுபோன்று பல ஆதாரங்களை போலீசார் சேகரித்தனர்.
இந்தநிலையில் பயங்கரவாதிகளுக்கான 10 நாள் போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதைதொடர்ந்து நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு அப்துல் சமீம், தவுபிக் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, பயங்கரவாதிகள் பயன்படுத்திய கத்தி, துப்பாக்கி, ஆடைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்ட 3 பெட்டிகள் கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதனை மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு கணேசன் கோர்ட்டில் ஒப்படைத்தார்.
ஆவணங்களை நீதிபதி அருள்முருகன் சரிபார்த்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஞானசேகர் ஆஜரானார். அப்போது மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு கணேசன் பயங்கரவாதிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போலீஸ் தரப்பில் மனு எதுவும் அளிக்கவில்லை. இதையடுத்து அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பயங்கரவாதிகளிடம் நீதிபதி அருள்முருகன் சில கேள்விகளை கேட்டார்.
அதாவது, போலீஸ் காவலில் இருக்கும் போது உங்களை யாரேனும் துன்புறுத்தினார்களா?, உணவு முறை எப்படி இருந்தது என கேட்டார். அதற்கு பயங்கரவாதிகள் 2 பேரும் “இல்லை” என பதில் கூறினர்.
பின்னர் நீதிபதி அருள் முருகன், பயங்கரவாதிகள் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதாவது, வருகிற 14-ந் தேதி இருவரையும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என கூறினார். நீதிபதியின் உத்தரவை தொடர்ந்து 2 பயங்கரவாதிகளும் கோர்ட்டில் இருந்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்க பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக அரசு வக்கீல் ஞானசேகர் கூறுகையில், சப்-இன்ஸ்பெக்டரை கொல்வதற்காக பயங்கரவாதிகள் பயன்படுத்திய கத்தி, துப்பாக்கி மற்றும் போலீசார் சேகரித்த முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை கோர்ட்டில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்க வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தேன். அதற்கு நீதிபதி சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது என்றார்.
Related Tags :
Next Story