ஆயுர்வேத மருத்துவ கல்லூரி சார்பில் நாகர்கோவிலில் தேசிய கருத்தரங்கு தொடங்கியது


ஆயுர்வேத மருத்துவ கல்லூரி சார்பில் நாகர்கோவிலில் தேசிய கருத்தரங்கு தொடங்கியது
x
தினத்தந்தி 1 Feb 2020 4:05 AM IST (Updated: 1 Feb 2020 4:05 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி சார்பில் 2 நாள் தேசிய கருத்தரங்கு நேற்று தொடங்கியது. கருத்தரங்கில் 10 மாநில ஆயுர்வேத டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில், 

நாகர்கோவில் கோட்டாரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி சார்பில் வயிறு, குடல், இரைப்பை குறித்த 2 நாள் தேசிய கருத்தரங்கு நாகர்கோவிலில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழா காலை நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் கிளாரன்ஸ் டேவி தலைமை தாங்கி அறிக்கை வாசித்தார். டாக்டர் ஸ்ரீலதா வரவேற்று பேசினார்.

முன்னாள் மத்திய இந்திய மருத்துவக்கழக தலைவர் வனிதா முரளிகுமார், நாகர்கோவில் ஜெயசேகரன் மருத்துவமனை நிர்வாகி டாக்டர் தேவபிரசாத், நாகர்கோவிலை அடுத்த தெரிசனங்கோப்பு ஸ்ரீசாரதா ஆயுர்வேத மருத்துவமனை டாக்டர் மகாதேவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.

இதையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த டாக்டர்கள் பிரசாத், சிவராமன், பாலமுருகன், வெங்கடேஸ்வரன், ஹரிகரன் ஆகியோர் கருத்தரங்கில் பேசினர். இதில் நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மாணவ- மாணவிகள், டாக்டர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த டாக்டர்கள்,மருத்துவ மாணவ- மாணவிகள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி, இமாச்சல பிரதேசம் என 10 மாநிலங்களைச் சேர்ந்த ஆயுர்வேத டாக்டர்கள், முதுநிலை மற்றும் இளநிலை ஆயுர்வேத மருத்துவ மாணவ- மாணவிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி டீன் கிளாரன்ஸ் டேவி தெரிவித்தார்.

இன்று 2-வது நாள் கருத்தரங்கு காலை 9 மணிக்கு தொடங்குகிறது. மாலை 4.30 மணிக்கு முடிவடைகிறது. இன்று மாலை நடைபெறும் கருத்தரங்க நிறைவு விழாவில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

2 நாள் தேசிய கருத்தரங்கை முன்னிட்டு ஸ்ரீவர்மா (பி.சி.ஆர்.) ஆயுர்வேத மருந்து விற்பனை நிறுவனம் சார்பில் மருந்து விற்பனை கண்காட்சி தனி அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது. அதில் பி.சி.ஆர். மகாராஜா வலி நிவாரண தைலம், ஆர்த்தோ கியூர் வலி நிவாரண எண்ணெய் மற்றும் மாத்திரைகளும் அரங்கில் வைக்கப்பட்டு இருந்தன. அதனை டாக்டர்களும், மருத்துவ மாணவ- மாணவிகளும் பார்வையிட்டனர். மேலும் அந்த நிறுவனத்தின் பல்வேறு மருந்துகள் பற்றிய விவரங்கள், குறிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் புத்தகங்களும் வைக்கப்பட்டு இருந்தன.

இதேபோல் மேலும் பல்வேறு மருந்து விற்பனை நிறுவனங்கள் சார்பில் தனித்தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 13 அரங்குகள் இடம் பெற்றிருந்தன.

கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மாணவ- மாணவிகள், டாக்டர்கள், ஸ்ரீவர்மா மருந்து விற்பனை நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செய்திருந்தன.

Next Story