குரூப்-4 தேர்வு முறைகேடு விசாரிக்க நீதிபதி தலைமையில் ஆணையம் - காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய்தத் வலியுறுத்தல்
குரூப்-4 தேர்வு முறைகேடு குறித்து விசாரிக்க நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய்தத் வலியுறுத்தினார்.
நெல்லை,
காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான சஞ்சய்தத் நேற்று நெல்லை வந்தார். இங்குள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக சுற்றுச்சூழல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டம் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் எதிரான திட்டமாகும். இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும். கடல் நீர் ஊருக்குள் புகுந்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு எற்படும். நீர், காற்று மாசுபடும். இது மாநில அரசின் உரிமையை பறிக்கும் திட்டமாகும். பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இயங்கும் மத்திய அரசு தமிழக மக்களுக்கும், தென்மாநில மக்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறது. இந்த அரசு தொழில் அதிபர்களின் கைப்பாவையாக செயல்படுகிறது.
புதுச்சேரி அரசு இந்த திட்டத்தை எங்கள் மாநிலத்தில் செயல்படுத்தவிடமாட்டோம் என்று அறிவித்து உள்ளது. அதேபோல் தமிழக அரசு அறிவிக்க தயாராக உள்ளதா? என்பதை விளக்க வேண்டும். மக்களின் போராட்டத்தின் காரணமாக தமிழக அரசு இந்த திட்டத்தை தி.மு.க.- காங்கிரஸ் தான் கொண்டு வந்தது என்று பொய்யான குற்றச்சாட்டை வைக்கிறது. ராகுல்காந்தி என்றும் விவசாயிகளின் பக்கம் தான் நிற்பார்.
45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் வேலை வாய்ப்பின்மையின் சதவீதம் அதிகரித்து உள்ளது. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. இந்திய பொருளாதார நிலையை சமாளிக்க ரிசர்வ் வங்கியில் இருந்து மத்திய அரசு கொள்ளையடித்து வருகிறது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தை புதைக்குழிக்கு அனுப்ப முயற்சி செய்து சட்ட திருத்தம் கொண்டு வருகிறார்கள். இந்த ஆட்சியாளர்கள் காந்தியின் கொள்கையை மறந்துவிட்டு கோட்சேயின் கொள்கையை செயல்படுத்தி வருகிறார்கள். அவர்கள் வாயால் ராம் என்று கூறிவிட்டு மனதளவில் நாதுராமை நினைக்கிறார்கள்.
தேர்வுகளில் முறைகேடுகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து முறைகேடு நடக்கிறது. தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் அதிக அளவில் முறைகேடு நடந்து உள்ளது. இந்த முறைகேடு குறித்து விசாரிக்க ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கவேண்டும் அல்லது ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து முழுமையாக விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, ரூபி மனோகரன், சக்தி திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.பி.துரை உள்பட பலர் உடனிருந்தனர்.
இதைத்தொடர்ந்து வேலை இல்லாத இளைஞர்களின் கோரிக்கையை பதிவு செய்யும் மிஸ்டு கால் திட்ட தொடக்கவிழா நடந்தது. இதற்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்தி தலைமை தாங்கினார். இந்த திட்டத்தை காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் தொடங்கி வைத்தார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் வீட்டிற்கு சென்று அவருடைய தந்தை மறைவுக்கு துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
Related Tags :
Next Story