நீதிபதி லோயா மரணத்தில் மறுவிசாரணை கோரி போராட்டம்; கேட்வே ஆப் இந்தியாவில் நடந்தது
குஜராத் மாநில போலீசாரால் சொராபுதீன் சேக் என்பவர் போலி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு கோர்ட்டு நீதிபதி லோயா கடந்த 2014-ம் ஆண்டு நாக்பூர் சென்றபோது மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
மும்பை,
போலி என்கவுண்ட்டர் வழக்கில் அப்போதைய குஜராத் மாநில உள்துறை மந்திரியும், தற்போதைய மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா பெயரும் சேர்க்கப்பட்டதால், இந்த வழக்கு சர்ச்சை மிகுந்ததாக மாறியது. இந்த நிலையில் நீதிபதி லோயா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதற்கிடையே புதிய ஆதாரங்கள் கிடைத்தால் வழக்கு மறு விசாரணை நடத்தப்படும் என்று சிவசேனா தலைமையில் அமைந்த மராட்டிய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையில் மும்பை ‘கேட்வே ஆப் இந்தியா’வில் லோயா மரணம் குறித்து மறு விசாரணை நடத்த வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ‘‘நீதிபதி லோயாவை கொலை செய்தது யார்?’’ என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட்டை அணிந்து இருந்தனர். மேலும் மகாத்மா காந்தி படம் இடம் பெற்ற பேனரையும் வைத்து இருந்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் கூறும்போது, ‘‘நீதிபதி லோயா மர்மமான முறையில் மரணம் அடைந்து உள்ளார். எனவே அந்த மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். மராட்டியத்தில் தற்போது ஆட்சி பொறுப்பில் இருக்கும் சிவசேனா தலைமையிலான அரசு இந்த மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
Related Tags :
Next Story