கோட்சேயின் சித்தாந்தத்துக்கு இன்னும் உயிர் இருக்கிறது; தேசியவாத காங்கிரஸ் சாடல்


கோட்சேயின் சித்தாந்தத்துக்கு இன்னும் உயிர் இருக்கிறது; தேசியவாத காங்கிரஸ் சாடல்
x
தினத்தந்தி 1 Feb 2020 12:06 AM GMT (Updated: 1 Feb 2020 12:06 AM GMT)

டெல்லி மாணவர்கள் மீது வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம், காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயின் சித்தாந்தம் இன்னும் உயிருடன் உள்ளதை காட்டுவதாக தேசியவாத காங்கிரஸ் மந்திரி நவாப் மாலிக் கூறினார்.

மும்பை, 

டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றுமுன்தினம் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பேரணி நடத்தினார்கள். இந்த பேரணியின் போது மாணவர்கள் மீது வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மந்திரியும், செய்தி தொடர்பாளருமான நவாப் மாலிக் கூறியதாவது:-

தேசத்தந்தை மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட அதே நாளில் தான் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து உள்ளது. இது மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயின் சித்தாந்தம் இன்னும் உயிருடன் உள்ளதையே காட்டுகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடுபவர்கள் தேசதுரோகிகள், அவர்களை சுட்டு வீழ்த்த வேண்டும் என்று மத்திய இணை மந்திரி அனுராக் தாக்குர் கூறிய சில நாட்களில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. பாரதீய ஜனதா தலைவர்களின் இத்தகைய கருத்துகள் தான் நாட்டில் குழப்பத்தை தூண்டி விடுகின்றன. எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டவருக்கு, துப்பாக்கியை கையாளுவது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story