உணவு பாதுகாப்பு விதிகளை மீறும் வணிகர்களுக்கு அபராதம் - கலெக்டர் எச்சரிக்கை
நீலகிரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு விதிகளை மீறும் வணிகர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் மற்றும் விதிகளை மீறுவோர் மீது உணவு பாதுகாப்பு துறையினரின் நேரடி கள ஆய்விற்கு பின்னர் கீழ்க்கண்ட அபராதம் விதிக்கப்பட உள்ளது. ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு கீழ் கொள்முதல் விற்பனை செய்யும் உணவு வணிகர்கள், உணவு பாதுகாப்பு பதிவு சான்று பெற்றவர்கள், சிறு மற்றும் குறு தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை மீறுவது கண்டறியப்பட்டால் முதல் முறை ரூ.3 ஆயிரம், 2-ம் முறை ரூ.6 ஆயிரம், 3-ம் முறை ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
3-ம் முறைக்கு மேல் உணவு வணிகரின் உணவு பாதுகாப்பு பதிவு சான்று ரத்து செய்யப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும். சிறு மளிகைக்கடை, நடமாடும் உணவு வணிகர்கள், தற்காலிக கடை நடத்துவோருக்கு முதல் முறை ரூ.ஆயிரம், 2-ம் முறை ரூ.2 ஆயிரம், 3-ம் முறை ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். நாள் ஒன்றிற்கு 500 லிட்டர் வரை பால் விற்போர் மற்றும் இறைச்சி விற்போர் போன்றோர் முதல் முறை ரூ.2 ஆயிரம், 2-ம் முறை ரூ.4 ஆயிரம், 3-ம் முறை ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, பதிவு சான்று ரத்து செய்யப்படும்.
மேலும் உணவு பாதுகாப்பு பதிவுச்சான்று பெறாமல் உணவு வணிகம் செய்யும் வணிகருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு, உணவு பாதுகாப்பு பதிவு சான்று ரத்து செய்யப்படும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துவோர், விற்பனை செய்யும் சில்லறை விற்பனையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை, மொத்த விற்பனையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை மற்றும் திருமண மண்டபம், சமுதாய நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ரூ.20 ஆயிரம் வரை மாவட்ட நிர்வாகத்தால் அபராதம் விதிக்கப்படும்.
எனவே, அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு தங்களது உணவு வணிகத்தை செய்ய அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பொதுமக்கள் உணவு பொருட்கள் தொடர்பான தங்களது புகார்களை 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விதித்த அபராத தொகையை செலுத்தாவிட்டால் கடைகளின் பதிவு சான்று அல்லது உரிம சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story