சிறப்பு சட்டமன்ற கூட்டத்துக்கு முன்பாக தனவேலுவின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க திட்டம்
சிறப்பு சட்டமன்ற கூட்டத்துக்கு முன்பாக தனவேலுவின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
புதுச்சேரி,
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பாகூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனவர் தனவேலு. ஆளுங்கட்சியில் இருந்து கொண்டே முதல்-அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
இதைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினார்கள். இந்த விவகாரம் கட்சியின் தேசிய தலைமை வரை எடுத்து செல்லப்பட்டது.
அதன் எதிரொலியாக தனவேலு எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவரது செயல்பாடு தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டது. அதற்கு அவர் விளக்கமும் அளித்தார்.
இந்தநிலையில் புதுவை அரசுக்கு எதிராக பாகூர் தொகுதி மக்களுடன் ஊர்வலம் நடத்திய அவர் கவர்னர் கிரண்பெடியை சந்தித்து முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஊழல் செய்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் புகார் அளித்தார்.
அவரது இந்த செயல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் புதுவை காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமையில் அரசு கொறடா அனந்தராமன் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான ஜெயமூர்த்தி, விஜயவேணி, தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகியோர் சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து பேசினார்கள்.
அப்போது சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் தனவேலு எம்.எல்.ஏ.வை தகுதிநீக்கம் செய்யக்கோரி அரசு கொறடா அனந்தராமன் கடிதம் ஒன்றை அளித்தார்.
அதை பெற்றுக்கொண்ட சபாநாயகர் சிவக்கொழுந்து, அதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறார். தற்போது இலங்கையில் நடைபெறும் விழா ஒன்றில் கலந்துகொள்ள அவர் சென்றுள்ளார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரி திரும்புகிறார்.
அதன்பின் தனவேலு எம்.எல்.ஏ. மீதான புகார் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்படும் என்று தெரிகிறது. அவரது விளக்கத்தை பெற்ற பிறகு ஆராய்ந்து அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்கிடையே வருகிற 12-ந்தேதி சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு முன்பாகவே தனவேலுவின் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story