கள்ளக்குறிச்சியில், சாலையை அகலப்படுத்த அளவீடு செய்யும் பணி தீவிரம்


கள்ளக்குறிச்சியில், சாலையை அகலப்படுத்த அளவீடு செய்யும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 1 Feb 2020 3:15 AM IST (Updated: 1 Feb 2020 5:58 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் சாலையை அகலப்படுத்த அளவீடு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சி, 

விழுப்புரம் மாவட்டத்தை 2 ஆக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைநகரமாக உள்ளதால், தினசரி அதிகளவிலான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதன் காரணமாக கள்ளக்குறிச்சி நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர். மேலும் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கள்ளக்குறிச்சியில் உள்ள சேலம் மெயின்ரோடு, துருகம் சாலை, காந்திரோடு ஆகிய இடங்களில் சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்துவதற்காக சாலையின் இருபுறங்களிலும் அளவீடு செய்ய வருவாய்த்துறையினருக்கு மாவட்ட கலெக்டர் கிரண்குராலா உத்தரவிட்டார்.

அதன் பேரில் வருவாய்த்துறை சார்பில் தலைமை நில அளவையர் வெற்றிவேலன் தலைமையில் வட்ட சார்-ஆய்வாளர் செந்தில்முருகன், குறுவட்ட நில அளவையர் மணிகண்டன், நடராஜ், கஸ்தூரி, விஜயசாந்தி, வருவாய் ஆய்வாளர் ராஜா, கிராம நிர்வாக அலுவலர் தேன்மொழி, கிராம நிர்வாக உதவியாளர்கள் ஆகியோர் சேலம் மெயின்ரோடு சாலையின் இருபுறமும் அளவீடு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அளவீடு செய்த பிறகு தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்க இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story