கோவிலுக்குள் பெண்ணிடம் முகமூடி கொள்ளை தாலி சங்கிலியை பறித்து சென்றனர்
எண்ணூரில் கோவிலுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள், பெண்ணிடம் தாலி சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவொற்றியூர்,
எண்ணூர் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர், தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மகாலட்சுமி(வயது 45). இவர், நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். தன்னுடன் 1½ வயது பேரக்குழந்தை ரித்திவிக்கையும் தூக்கிச் சென்று இருந்தார்.
கோவிலில் உள்ள முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பெண்கள் மட்டுமே அங்கு இருந்தனர். மகாலட்சுமி தனது இடுப்பில் பேரக்குழந்தையை வைத்துக்கொண்டு மெய் மறந்து சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார்.
முகமூடி கொள்ளையர்கள்
அப்போது தலையில் குரங்கு குல்லா அணிந்து முகத்தை மூடிக்கொண்டு முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் கோவிலுக்குள் புகுந்தனர். அவர்களில் ஒருவன், மகாலட்சுமி இடுப்பில் இருந்த ரித்திவிக்கை பிடித்து இழுத்தான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மகாலட்சுமி பேரன் ரித்திவிக்கை விடாமல் இறுக்கமாக பிடித்துக் கொண்டார். அப்போது மற்றொரு கொள்ளையன், மகாலட்சுமி கழுத்தில் கிடந்த 3 பவுன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றான்.
ஒரு பக்கம் பேரக்குழந்தை, மறுபக்கம் தாலி சங்கிலியை பிடித்துக் கொண்டு முகமூடி கொள்ளையர்களுடன் மகாலட்சுமி போராடினார். கொள்ளையன் அவரது தாலி சங்கிலியை பிடித்து இழுத்து அறுத்ததில் மகாலட்சுமிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. அவர் வலியால் அலறினார்.
தப்பிச் சென்றனர்
அவரது சத்தம் கேட்டு அங்கு சாமி கும்பிட வந்திருந்த பெண்கள், கொள்ளையர்களை விரட்டிச்சென்றனர். ஆனால், அதற்குள் கொள்ளையர்கள், 3 பவுன் தாலி சங்கிலியுடன், கோவிலுக்கு வெளியே தயாராக நிறுத்தி வைத்து இருந்த தங்களது மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.
சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவிலுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story