சேலம் விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை


சேலம் விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
x
தினத்தந்தி 2 Feb 2020 4:30 AM IST (Updated: 1 Feb 2020 11:18 PM IST)
t-max-icont-min-icon

சேலம் விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஓமலூர்,

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய நோய் இந்தியாவில் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி ஓமலூர் அருகே உள்ள சேலம் காமலாபுரம் விமான நிலைய வளாகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு விமான நிலைய இயக்குனர் வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார். ட்ரூ ஜெட் மேலாளர் பிரசன்னா, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சரக்கபிள்ளையூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரமணன் கலந்து கொண்டு கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை குறித்து பேசினார். மேலும் விமான நிலையத்தில் விழிப்புணர்வு பதாகைகள் வைப்பது, கொசு மருந்து புகை அடிப்பது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் சுகாதார மேற்பார்வையாளர் மீனாட்சி சுந்தரம் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு நடவடிக்கைகள்

இதையடுத்து விமான நிலையம் முழுவதும் கொசு மருந்து அடிக்கப்பட்டது. ஆரம்ப சுகாதார பணியாளர்கள் கொசு மருந்தை அடித்தனர். மேலும் சரக்கபிள்ளையூர் வட்டாரத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சுகாதார நிலையம் சார்பில் தீவிர சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story